வேடசந்தூர் அருகே இளம் பெண் வெட்டிக்கொலை – கள்ளக்காதலன் கைது!

இந்த செய்தியை பகிருங்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியை வெட்டிக்கொன்று சடலத்தை சாலையோரம் வீசிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியை சேர்ந்தவர் கவுசிக் பாண்டி. இவருக்கு, திண்டுக்கல்லை சேர்ந்த திருமணமாகி கணவரை பிரிந்த பாண்டீஸ்வரி(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கவுசிக் பாண்டி – பாண்டீஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்றிரவு வழக்கம்போல் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கவுசிக் பாண்டி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பாண்டீஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசியுள்ளார். இதனை தொடர்ந்து, அங்கிருந்து திண்டுக்கல் பகுதிக்கு தப்பிச்சென்றார். அங்கு சுற்றித்திரிந்த கவுசிக் பாண்டியை, சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணை வெட்டிக்கொன்றதாக அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அவர் வேடசந்தூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில், சாலையோரம் கிடந்த பாண்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசிக் பாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us