சௌதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இரானுடனான மோதல் போக்கை குறைக்க வேண்டும் என விரும்புகின்றன.
அமெரிக்கா – இரானுடனான உறவுகளை மேம்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சமாதானப்படுத்தப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
இரானுடனான சௌதி அரேபியாவின் உறவு பதற்றமாகவே உள்ளது. ஆனால் அரபு நாடுகள், டிரம்ப் தனது இரண்டாவது முறை பதவிக்காலத்தில் இரான் மீது சுமூகமான போக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், காஸா மற்றும் லெபனானில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றன.
இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கடந்த ஆண்டு சீனா மத்தியஸ்தம் செய்த பிறகு, இரான் மீதான சௌதி அரேபியாவின் அணுகுமுறை மாறிவிட்டது.
இரானுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா சுமூகமாக்க வேண்டும் என்று சௌதி அரேபியா விரும்புகிறது.
சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற அரபு இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டில், இரான் மீதான இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் குறித்து பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விமர்சித்து பேசியுள்ளார்.
இரானின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்று சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் கூறினார்.
டிரம்ப் தனது கடந்த பதவிக்காலத்தில் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார், மேலும் அதன் மீது பல தடைகளையும் விதித்தார்.
சமீபத்தில், ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலிய தாக்குதலில் இறந்ததை அடுத்து இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
திங்கட்கிழமையன்று அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் ஆலோசகர் அன்வர் கர்காஷ் கூறும் போது, “டிரம்ப் நிர்வாகத்துடன் ஒரு முழுமையான அணுகுமுறையை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.
2017-ல் டிரம்ப் அதிகாரத்திற்கு வரும் போது கவலையில்லாமல் இருந்த சௌதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தற்போது எச்சரிக்கையுடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
உறுதியற்ற தன்மை, உலகளாவிய விவகாரங்களில் ஒதுக்கப்படுவது போன்ற அமெரிக்காவின் கொள்கைகள் குறித்த அச்சங்கள் அரபு நாடுகளிலும் அதிகரித்துள்ளது.
2018-ம் ஆண்டு, இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் முறித்துக் கொண்டபோது, சௌதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.
அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட பிறகு இரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார் டிரம்ப்.
ஆனால், இந்த முறை இரானுக்கு எதிராக டிரம்ப் எடுக்க நினைக்கும் கடுமையான நிலைப்பாட்டை சௌதியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை.
இரான் விவகாரத்தில் அரபு நாடுகள் சொல்வதை டிரம்ப் கேட்பாரா?
ஐநாவுக்கான அமெரிக்க தூதராக எலைஸ் ஸ்டெஃபானிக்-கை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
இரானுக்கு அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும் பிரசாரத்திற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக எலைஸ் ஸ்டெஃபானிக், எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், “நீண்ட காலமாக, பைடன்- ஹாரிஸ் நிர்வாகத்தின் பலவீனம் காரணமாக எங்கள் எதிரிகள் தைரியமாகிவிட்டனர். அதிபர் டிரம்ப் திரும்பிய உடன், வலிமை மூலம் அமைதி திரும்பியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தொடர்பாக டிரம்ப் மீது அரபு நாடுகள் அழுத்தம் கொடுக்க முயற்சித்தாலும், அது டிரம்பிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை.
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக ஆகன்சா மாகாணத்தின் ஆளுநர் மைக் ஹக்கபீ-யை நியமிப்பதாக அறிவித்ததன் மூலம், இஸ்ரேல் தொடர்பான தனது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்த காலத்தில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவை அளித்தார்.
டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே இந்த மாநாட்டை அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஏற்பாடு செய்திருக்கிறது.
இதன் மூலம், காஸா மற்றும் லெபனானில் நடக்கும் பிரச்னைகளை விரைவில் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அறிவுறுத்த அமெரிக்கா மீது அழுத்தம் கொடுக்க விரும்புகின்றன