“டிரம்ப் தான் உதவணும்! போர் நிறுத்தம் செய்ய ரெடி..” ஹமாஸ் திடீர் அறிவிப்பு! உற்று கவனிக்கும் இஸ்ரேல்

“டிரம்ப் தான் உதவணும்! போர் நிறுத்தம் செய்ய ரெடி..” ஹமாஸ் திடீர் அறிவிப்பு! உற்று கவனிக்கும் இஸ்ரேல்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே திடீர் திருப்பமாகப் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் டிரம்பும் அழுத்தம் தர வேண்டும் என்றும் ஹமாஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்தாண்டு அக். மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது.

ஹமாஸ்: இதற்குப் பதிலடியாகக் காசா மீது இஸ்ரேல் போரை ஆரம்பித்து. சுமார் ஓராண்டிற்கு மேலாக இந்த போர் தொடர்கிறது. இதனால் காசாவில் உள்ள பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப், பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த வாரம் தான் இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி மத்தியஸ்தனம் செய்து வந்த கத்தார், இனி அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என்று சொல்லி விலகி இருந்தது. போர் நிறுத்தத்தில் இரு தரப்பும் சீரியஸாக இருக்க வேண்டும் எனச் சொல்லி கத்தார் மத்தியஸ்தனம் செய்யும் பொறுப்பில் இருந்து விலகி இருந்தது. இந்தச் சூழலில் தான் ஹமாஸ் தரப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன சொன்னார்: இது தொடர்பாக தோஹாவில் உள்ள ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் பாஸ்சம் நைம் கூறுகையில், “போர்நிறுத்தம் குறித்த முன்மொழிவு வைக்கப்பட்டால் அதை ஏற்க ஹமாஸ் தயாராக உள்ளது. இஸ்ரேலும் அந்த போர் நிறுத்த முன்மொழிவை மதிக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நிபந்தனை. ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாங்கள் டிரம்பை கேட்டுக் கொள்கிறோம்” என்றார். காசா போரை முடிவுக்குக் கொண்டு வர பல உலக நாடுகள் முயன்றன.

குறிப்பாக கத்தார் இரு தரப்பிற்கும் இடையே மத்தியஸ்தனம் செய்ய முயன்றது. இருப்பினும், கடந்த சனிக்கிழமை மத்தியஸ்தராக தனது பங்கை நிறுத்திக்கொள்வதாக கத்தார் அறிவித்தது. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் நிஜமாகவே ஆர்வம் காட்டினால் மீண்டும் இந்த பணியைத் தொடர நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி தெரிவித்தார்.

பின்னணி: இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்தாண்டு நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 1,206 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ஆரம்பித்த தாக்குதலில் இதுவரை காசாவில் 43,764 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாலேயே போர் நிறுத்தம் கொண்டு வர உலக நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. இதற்கிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த மாதம் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது 251 பணயக்கைதிகளையும் ஹமாஸ் கடத்தி சென்றனர். அவர்களில் சுமார் 150 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் 97 பேர் காசாவில் தான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறுகிறது. இந்தச் சூழலில் தான் ஹமாஸ் கடந்த வாரம் பணயக்கைதிகளின் வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.