பிரேசிலியா: பிரேசில் நாட்டின் அதிபர் லுலா டா சில்வாவின் மனைவி ஜான்ஜா சில்வா பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரவுவது எவ்வளவு தூரம் ஆபத்தானது என்பதை அவர் விளக்கினார். அப்போது அவர் பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் ஓனர் எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் திட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இருக்கிறார். அவரது மனைவி ஜான்ஜா லுலா டா சில்வா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பிரேசில் அதிபர் மனைவி: ஜி20 தொடர்பான சோஷியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவுவது குறித்தும் அது சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக முடியும் என்பது குறித்தும் பேசினார். அப்போது தான் அவர் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் திட்டினார். கெட்ட வார்த்தை: அவர் பேசிக் கொண்டே இருக்கும் போது, திடீரென அங்குக் கப்பலின் ஹார்ன் சத்தம் கேட்டது. அப்போது ஜான்ஜா லுலா டா சில்வா, “இது எலான் மஸ்க் தான் என்று நினைக்கிறேன்” என்று கிண்டல் செய்தார்.
மேலும், தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து அச்சமில்லை என்ற அவர், கெட்ட வார்த்தையிலும் திட்டினார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது எலான் மஸ்க் வரை சென்றுள்ளது. அவரே கூட இந்த வீடியோவை சிரிப்பு எமோஜியுடன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதேபோல மற்றொரு ட்வீட்டில் ஜான்ஜா லுலாவின் கணவரும் பிரேசில் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூயிஸ் அடுத்த தேர்தலில் தோற்கப் போகிறார் என்றும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அடுத்த வாரம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது
மோதல் போக்கு: சமீப காலங்களாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. பிரேசில் நாட்டின் புதிய விதிகளின்படி அனைத்து சமூக வலைத்தளங்களும் சட்ட பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இருப்பினும், தனது எக்ஸ் நிறுவனத்திற்குச் சட்டப் பிரதிநிதியை நியமிக்க எலான் மஸ்க் மறுத்தார். இதையடுத்து சட்ட பிரதிநிதியை நியமிக்கத் தவறியதற்காகவும், போலி செய்திகள் மற்றும் வெறுப்புச் செய்திகளைத் தடுப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்ததாகக் கூறி எக்ஸ் தளத்திற்குப் பிரேசில் தடை விதித்தது. சுமார் ஒரு மாதம் இந்த தடை அமலில் இருந்தது. சட்ட பிரதிநிதி நியமிக்கப்பட்ட பிறகே இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.