பாகிஸ்தான் நாட்டில் மிகவும் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மக்களிடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு குடும்பம் தங்களின் பாட்டியின் நினைவு நாளுக்காக மிகப் பெரிய விருந்தை அளித்துள்ளனர். பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ. 1.25 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த விருந்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாம் சாலைகளில் யாசகம் கேட்டு வாழ்வோரைப் பார்த்து இருப்போம். இவர்கள் தினசரி வாழ்க்கையைச் சமாளிக்கவே பலரிடம் யாசகம் பெற வேண்டி இருக்கும் என்றே நாம் நினைத்து இருப்போம்.
வினோதம்: பெரும்பாலான யாசகர்களின் நிலை அப்படி தான் இருக்கிறது என்ற போதிலும் ஒரு சில யாசகர்கள் லட்சக் கணக்கில் பணம் சேமித்து வைத்து இருக்கிறார்கள். நமது நாட்டில் கூட சொந்தமாகப் பங்களா வைத்திருக்கும் யாசகர்கள் கூட இருக்கிறார்கள். பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகவும் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள குஜ்ரன்வாலா என்ற பகுதியில் பிச்சைக்காரர்கள் இணைந்து ஒரு மிகப் பெரிய விருந்து கொடுத்துள்ளனர். குஜ்ரன்வாலா பகுதியில் ஒரு குடும்பம் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்து இருக்கிறது. அந்த குடும்பத்தினர் சேர்ந்து தான இந்த மெகா விருந்தை வைத்து இருக்கிறார்கள். சுமார் 1.25 கோடி பாகிஸ்தான் ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 38 லட்சம்) செலவில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட விருந்தில் சுமார் 20,000 பேர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எதற்காக: அவர்களின் பாட்டி கடந்த மாதம் உயிரிழந்து இருக்கிறார். அவரது 40வது நாளை நினைவு கூறும் வகையில் இந்த ஆடம்பர விருந்தை அவர்கள் கொடுத்துள்ளனர். இந்த விருந்தில் பங்கேற்க பல்வேறு தரப்பினரையும் அவர்கள் அழைத்துள்ளனர். மேலும், அவர்கள் வந்து செல்ல வாகனங்களையும் கூட இவர்களே ஏற்பாடு செய்துள்ளனர்.
அங்குள்ள குஜ்ரன்வாலாவில் உள்ள ரஹ்வாலி ரயில் நிலையம் அருகே நடந்த இந்த பிரம்மாண்ட விருந்தை அவர்கள் கொடுத்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர். அங்குத் திரண்ட கூட்டம் பலரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருந்துள்ளது. 250 ஆடுகள்: மேலும், இவர்கள் ஒரு வேளைக்கு மட்டும் உணவு தரவில்லை. மதியம் மற்றும் இரவு என இரண்டு வேலைகளுக்கும் விருந்து கொடுத்துள்ளனர்.. பாரம்பரிய உணவுகளான சிரி பேய், முராப்பா உள்ளிட்ட இறைச்சி உணவுகளை மதிய உணவிற்காக வழங்கியுள்ளனர். இரவு உணவிற்கு, ஆட்டிறைச்சி, நான் மாதர் கஞ்ச் உள்ளிட்டவற்றைக் கொடுத்துள்ளனர். இந்த மெகா விருந்துக்கு சுமார் 250 ஆடுகள் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அந்நாட்டு ஊடகங்களும் கூட இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன்கள்: பெரும்பாலானோர் நகைச்சுவையாகவே கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். தங்களால் எவ்வளவு வேலை செய்தாலும் இவ்வளவு தூரம் சம்பாதிக்க முடியாது என்றும் பேசாமல் தாங்களும் யாசகம் பெற்ற வாழ்க்கையை நடத்தலாம் என்றும் ஒரு தரப்பினர் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் இன்னும் சிலர் யாசகம் பெறுவோரிடம் எப்படி இவ்வளவு பணம் வந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என ட்வீட் செய்து வருகிறார்கள்.