ஆம்ஸ்டர்டாம்: காசாவில் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டிற்கு எதிராகவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது கடந்தாண்டு அக். மாதம் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் போரைத் தொடங்கியது. இதனால் காசாவில் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்த இந்த போரில் அப்பாவி மக்கள் பல நூறு பேர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழலும் ஏற்பட்டது. பிடிவாரண்ட்: இந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர் குற்றங்கள் நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அந்த வழக்கில் இப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டிற்கு எதிராகவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது கொலை, துன்புறுத்தல் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள் உள்ளிட்ட போர்க் குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றம் சுமத்தியுள்ளது. காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட இஸ்ரேல் தடை செய்ததாகவும் இதனால் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டதாகச் சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைத்து, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்களை முன்னெடுத்ததாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறுகிறது.. அக்டோபர் 8, 2023 முதல் மே 20, 2024 வரையில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் போர்க் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கண்டனம்: மேலும், பாலஸ்தீன மக்களின் போர் மரணம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த விளக்கங்களை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம், போர் தொடர்பாக இஸ்ரேல் அரசின் அறிக்கைகளையும் நிராகரித்துள்ளது.
மேலும், மருத்துவ உதவிகளைப் புறக்கணித்து, குழந்தைகள் உட்பட பல உயிரிழப்புகளை இஸ்ரேல் ஏற்படுத்தியதாகச் சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஒப்புதல் இல்லாமல் இந்த வழக்கைச் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்று இஸ்ரேல் கூறியிருந்த நிலையில், அந்த வாதத்தைச் சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த இரு இஸ்ரேல் தலைவர்கள் மட்டுமின்றி ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரிக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முகமது தியாப் இப்ராஹிம் கடந்த ஜூலை மாதமே ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இருந்த போதிலும், அவருக்கு இப்போது சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு மோதல்: இஸ்ரேல் ஹமாஸ் மோதல் என்பது இப்போது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே லெபனானில் உள்ள பெற்ற ஹிஸ்புல்லா, ஈரான் நாடுகளும் இஸ்ரேலை எதிர்த்து வருகிறது. அதேநேரம் ஹமாஸ் தலைவர் சின்வார் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.