ஜெருசலேம்: நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா, உக்ரைன் மீது ஏவியுள்ளது.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சிறிய நாடு என்பதால் எளிதில் கைப்பற்றிவிடலாம் என நினைத்த ரஷ்யாவுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி அளித்து வருவதால் ரஷ்யாவுக்கு கடும் சவாலாக உள்ளது.
இதனால் ஆயிரம் நாட்களை கடந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நீடித்து வருகிறது. ஆயிரம் நாட்களை கடந்துவிட்ட நிலையில், போர் பதற்றம் தணியும் என்று பார்த்தால் அதிகரிக்கவே செய்து இருக்கிறது. இதற்கு காரணம் அமெரிக்கா அதிபர் பைடன் போட்ட ஒரு உத்தரவுதான். நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏதுவாக இந்த உத்தரவை பைடன் பிறப்பித்துள்ளார்.
போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இதனால் ரஷ்யாவை கடுமையாக தாக்க முடியாமல் உக்ரைன் தவித்து வந்தது. இந்த நிலையில், உக்ரைன் இனி நீண்ட தூரத்திற்கு செல்லும் ஏவுகணைகளை இனி பயன்படுத்தலாம் என ஜோ பைடன் உத்தரவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த ரஷ்யா அதிபர் புதின், அணு ஆயுத கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார். அதாவது, பாலிஸ்டிக் ஏவுகணை உட்பட சக்தி வாய்ந்த நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு பதிலாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இதனால் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் செல்லும் தொலை தூர ஏவுகணைகளை ரஷ்யா, உக்ரைன் மீது ஏவியுள்ளது. ரஷ்யா ஏவிய ஏவுகணை எந்த இடத்தை தாக்கியது..இதனால், பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து உக்ரைன் தரப்பு இதுவரை தெளிவாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா, ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்க்குதல் நடத்தியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என்பவை 5,000 கிலோமீட்டர்களுக்கும் மேலாக பறக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளாகும். நீண்ட தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகனைணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா இன்று அணு ஆயுதம் இல்லாத ஏவுகணையை கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் கொடுத்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.