மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் உலகப் போராக வெடிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், ஓரேஷனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை புதின் அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களில் ரஷ்யா உக்ரைன் மோதல் தலைகீழாக மாறிவிட்டது. கிட்டதட்ட உலகப் போரே தொடங்கும் அளவுக்குத் தீவிரமானதாக மாறியுள்ளது. ஒரு பக்கம் நீண்ட தூரம் சென்று தாக்கும் தங்கள் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் அனுமதி அளித்துள்ளது.
உக்ரைன் மோதல்: இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த நிலையில், அதற்குப் பதிலடியாக ரஷ்யா அதிநவீன கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இந்த தாக்குதல் நடந்து சில நாட்களில் ரஷ்ய அதிபர் புதின் மற்றொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதாவது ஹைப்பர்சோனிக் ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையின் உற்பத்தியை அதிகரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மோதலுக்கு நடுவே புதின் ராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு அமைச்சர் உட்பட ஏவுகணையை உருவாக்கும் பொறுப்பில் உள்ளவர்களுடன் புதின் இந்த ஆலோசனையை நடத்தினார். அந்நாட்டு ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஹைப்பர்சோனிக் ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை ரஷ்யா அதிகரிக்கும் என்றும் வரும் காலங்களில் இந்த ஏவுகணைகளைக் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் புதின் கூறியிருக்கிறார்.
உத்தரவு: அந்த கூட்டத்தில் புதின் மேலும் கூறுகையில், “ரஷ்யா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் நிலைமை மற்றும் தன்மையைப் பொறுத்து இந்த சோதனைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். போர்க் காலங்களில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கும் வகையில் சோதனை நடத்தவுள்ளோம்” என்றார். இது ரஷ்யா உக்ரைன் போரில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போர் சுமார் மூன்று ஆண்டுகளாகத் தொடரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரமான டினிப்ரோ மீது ரஷ்யா அதிநவீன ஏவுகணையை வீசியது. இது ரஷ்யா உக்ரைன் மோதலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மாக் 10 எனப்படும் இந்த அதிநவீன ஏவுகணை ஒலியைக் காட்டிலும் சுமார் 10 மடங்கு வேகமாகப் பயணிக்கும் திறன் கொண்டதாகும். உடனடியாக: இந்த ஏவுகணைகளின் தயாரிப்பை அதிகரிக்க உத்தரவிட்ட புதின், இதுபோன்ற மேலும் சில ஏவுகணைகளை உருவாக்கி வருவதாகவும் புதின் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாம் இதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.. அதுவும் உடனடியாக.! நேற்று சோதனை செய்யப்பட்ட ஆயுதம் என்பது ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கிறது.
இதுபோன்ற ஏவுகணை தொழில்நுட்பத்தை உலகில் வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. வரும் காலத்தில் அவர்கள் இதுபோன்ற ஏவுகணைகளை உருவாக்கலாம். அது ஆறு மாதங்களில் நடக்கலாம் அல்லது ஓராண்டில் நடக்கலாம்.. ஆனால் நம்மிடம் இப்போதே இருக்கிறது” என்றார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் தங்கள் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக ரஷ்ய இந்த ஒரெஷ்னிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக புதின் கூறியுள்ளார்.