ஆம்ஸ்டர்டாம்: காசாவில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே வெடித்த போர் ஓராண்டிற்கு மேலாகத் தொடர்கிறது. இந்தச் சூழலில்தான் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து நமக்கு மேஜர் கேள்வி எழும். அதாவது இஸ்ரேல் நாட்டை விட்டு வெளியே வந்தால் நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? என்பது தான் அது. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
கடந்தாண்டு இஸ்ரேல் ஹமாஸ் இடையே வெடித்த போர் ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த போரால் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்னவே காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் தான்.
இந்த போரில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தங்கள் இருப்பிடங்களை விட்டு பல லட்சம் பேர் வெளியேறினர். இதற்கிடையே இந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர்க் குற்றங்கள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. பிடிவாரண்ட்: இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
அந்த வழக்கில் தான் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.. கொலை, துன்புறுத்தல் உள்ளிட்ட போர்க் குற்றங்களுக்காக பிடிவாரண்ட் பிறப்பிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோருக்கு எதிராகவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. சரி, இப்போது மேஜர் கேள்விக்கு வருவோம். இஸ்ரேல் நாட்டை விட்டு வெளியே வந்தால் நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
விதி என்ன: இந்த சர்வதேச நீதிமன்றம் என்பது 1998இல் போடப்பட்ட ரோம் உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டும். இதனால் நெதன்யாகு எந்தவொரு உறுப்பு நாட்டிற்கு வந்தாலும் அவரை காவலில் வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. ஆனால், சர்வதேச நீதிமன்றத்தால் அதன் அதிகாரத்தை உறுப்பு நாடுகளின் மீது செயல்படுத்த முடியாது. மேலும், சர்வதேச நீதிமன்றத்திற்கு எனத் தனியாக போலீஸ் அமைப்பு இல்லை. எனவே, நெதன்யாகுவை கைது செய்ய அவர்கள் ஐநா உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை நம்பியிருக்க வேண்டும். அதாவது சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஐநா உறுப்பு நாடுகள் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என்பதே விதி. ஆனால், அப்படி கைது செய்யவில்லை என்றாலும் சர்வதேச நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது.
வாய்ப்பில்லை: ஐநா சபையில் இருக்கும் பல உறுப்பு நாடுகள் இஸ்ரேலின் நட்பு நாடுகளாக உள்ளன. குறிப்பாகப் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைக் கொண்டு இருக்கிறது. இதனால் அந்த நாடுகள் நிச்சயம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வாய்ப்பில்லை. அமெரிக்கா இந்த சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடு இல்லை. இதனால் அமெரிக்கா சென்றாலும் கைதாக வாய்ப்பில்லை. கைது செய்யப்படுவார்: அதேநேரம் எல்லா நாடுகளும் கைது இதே நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தங்கள் நாட்டிற்கு நெதன்யாகு வந்தால் நிச்சயம் கைது செய்வோம் எனப் பல நாடுகள் சொல்லியுள்ளன. அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, கனடா, ஸ்பெயின் நாடுகள் நிச்சயம் கைது செய்வோம் எனக் கூறியுள்ளன. நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம், துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக மட்டும் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை இந்த முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை செயலாளர் ஜோசப் பொரெல் , “இது ஒரு அரசியல் முடிவு இல்லை.. இது ஒரு நீதிமன்றம்.. முறையாக விசாரணை நடத்தி இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தின் இந்த முடிவை மதிக்கிறோம். இதை நாங்கள் நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம்” என்று கூறியுள்ளது.