அமெரிக்க சுகாதார துறையின் முக்கிய பதவியில் இந்தியர்

அமெரிக்க சுகாதார துறையின் முக்கிய பதவியில் இந்தியர்

வாஷிங்டன்: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்று, அங்கு உள்ள ஸ்டான்போர்ட் பல்கலையின் சுகாதார கொள்கை துறையின் பேராசிரியராக உள்ள டாக்டர் ஜெய் பட்டாச்சார்யா, 56, என்பவர், அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், டிரம்ப் வெற்றி பெற்றார். இவர், 2025 ஜனவரி 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் துவங்கி தற்போது நடந்து வருகின்றன. முக்கிய துறைகளுக்கான நபர்களை டிரம்ப் தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் அமெரிக்க சுகாதார துறையின் முக்கிய அமைப்பான, தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளியான ஜெய் பட்டாச்சார்யாவை டிரம்பின் நிர்வாக மாற்ற குழு பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

கோல்கட்டாவில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யா, அமெரிக்கா சென்று அங்குள்ள ஸ்டான்போர்ட் பல்கலையில், மருத்துவத்தில் முதுநிலை பட்டமும், பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.தற்போது, ஸ்டான்போர்ட் பல்கலையின் சுகாதார கொள்கை துறையின் பேராசிரியராகவும், ஏழைகளின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு குறித்த தொடர் ஆய்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், மருத்துவ ஆராய்ச்சிக்காக 4.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை வைத்துள்ள மிகப்பெரிய அரசு நிறுவனமாக உள்ளது.

இந்நிறுவனம் சுகாதாரம் மற்றும் மக்கள் சேவைகள் துறையின் கீழ் வருகிறது.

அத்துறையின் தலைவர் ராபர்ட் கென்னடி ஜூனியரை, ஜெய் பட்டாச்சார்யா சமீபத்தில் சந்தித்து, தேசிய சுகாதார நிறுவனம் எந்த வகையான புதுமையான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து விவாதித்தார். அவரது ஆலோசனைகள் ராபர்ட் கென்னடியை கவர்ந்ததாக செய்தி வெளியானது.