உலகமே மிகவும் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். இந்த நிலையில், “இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரேநாளில் எண்ணி முடித்தது. ஆனால், கலிபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்கிறது” என இந்தியாவின் தேர்தல் நடைமுறையை உலகப் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மற்றும் மே, ஜூன் மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில், 64 கோடிப் பேர் தங்கள் வாக்குகளைச் செலுத்தியிருந்தனர். இவை, ஒரேநாளில் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக இருந்தது.
மேலும், இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்படுவதுடன், துல்லியமாகவும் விரைவாகவும் வாக்குகளை எண்ணி முடிக்க முடிகிறது. இதைப் பாராட்டியிருக்கும் எலான் மஸ்க், அதேநேரத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்பதாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சந்தேகம் எழுப்பிவந்தன. அந்தச் சமயத்தில் எலான் மஸ்க், “மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இது, இந்தியாவில் மேலும் விவாதத்தை எழுப்பியது.
ஆனால் இதற்குப் பதிலளித்த இந்திய அரசு, “இந்தியாவில் இவிஎம் இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை.
வெளியில் இருந்து அதை ஹேக் செய்வது என்பது சாத்தியமற்றது” எனக் கூறியிருந்தது. மேலும், ”மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவியும் (விவிபாட்) பயன்படுத்தப்படுகிறது” என உறுதியளித்திருந்தது.
கலிஃபோர்னியா உள்ளிட்ட சில மாகாணங்களில் எப்போதுமே வாக்கு எண்ணிக்கை பல வாரங்களுக்கு நீடிக்கும். கலிஃபோர்னியாவை பொருத்தவரை பெரும்பாலானவர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்துவார்கள். இத்தகைய வாக்குகளை எண்ணுவதற்கு உறையின் மீது உள்ள கையெழுத்து சரிபார்த்தல் உட்பட பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதாவது, நேரில் போடப்பட்ட வாக்குகளுடன் ஒப்பிடும்போது அஞ்சல் வாக்குகளைச் சரிபார்க்க அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே, தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.