கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களில் மீண்டும் உச்சமடைந்துள்ளது. இதற்கிடையே நள்ளிரவு நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப் பெரிய தாக்குதலால் பல லட்சம் உக்ரைன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அது பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ரஷ்யா உக்ரைன் இடையே ஆண்டுக் கணக்கில் மோதல் நிலவி வருகிறது. இடையில் சில காலம் அமைதியான சூழல் நிலவிய போதிலும், இப்போது மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
மேற்குலக நாடுகள் தங்கள் நாட்டின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்த நிலையில், இதுவே மீண்டும் பதற்றம் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. இதற்கிடையே உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய அதிபர் புதின் சில பகீர் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். புதின்: அதாவது தாக்குதல் குறித்து உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள 3 கட்டளை மையங்கள் தான் முடிவெடுப்பதாகவும் அந்த மையங்களை புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கப்போவதாக புதின் அச்சுறுத்தினார். உக்ரைன் நாட்டின் எனர்ஜி கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியிருந்தது. இதனால் உக்ரைன் நாட்டின் மின்சார சப்ளை மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் இருளில் தள்ளப்பட்டுள்ளனர். அதாவது சுமார் 90க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் சுமார் 100 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் நடத்தியிருந்தது.
எனர்ஜி கட்டமைப்பு: இந்த தாக்குதலில் தான் உக்ரைன் நாட்டின் எனர்ஜி கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வெளியாகியுள்ளது. அதில் இருள் சூழ்ந்து இருக்கும் நேரத்தில் வானத்தில் இருந்து கண்ணைப் பறிக்கும் வகையில் இடி விழுவது போலச் சரமாரியாக ஏவுகணைகள் பாய்கிறது. பார்க்கவே பயமாக இருக்கும் இந்த தாக்குதல் உக்ரைன் நாட்டின் எனர்ஜி கட்டமைப்பைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பல லட்சம் பேர் பாதிப்பு: உக்ரைன் நாட்டில் இப்போது கடும் குளிர் நிலவும் சூழலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹீட்டர்களை கூட இயக்க முடியாமல் மக்கள் பரிதவித்துப் போய் இருக்கிறார்கள்.
மேற்குலக நாடுகளின் ஏவுகணைகள் மூலம் தங்கள் நாட்டிற்குள் உக்ரைன் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த தாக்குதலை நடத்துவதாக ரஷ்யா கூறியது. ரஷ்யா உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாகப் போர் தொடரும் நிலையில், சமீப காலங்களில் போர் பதற்றம் மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளது.
புதின் மிரட்டல்: ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கீவ் நகரில் உள்ள ராணுவ மையங்கள், ராணுவ தொழிற்சாலைகள் அல்லது கட்டளை மையங்கள் மீது ஓரேஷ்னிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படலாம். அதற்கான வாய்ப்புகளை நாங்கள் நிராகரிக்கவில்லை” என்றார், ஒருவேலை ரஷ்யா தனது ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினால் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். என்றே அஞ்சப்படுகிறது. முன்னதாக கடந்த வாரம் தான் ரஷ்யா தனது அதிநவீன ஓரேஷ்னிக் ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவி சோதனை செய்தது. இந்த ஏவுகணை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதை புதினே முன்பு ஒரு இடத்தில் கூறியிருந்தார். மேலும், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கேற்ப பதிலடி தரப்படும் என்றும் புதின் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.