15 மாத கர்ப்பம்.. சிசு கூட கர்ப்பப்பையில் இருக்காது.. இளம்பெண்களை குறிவைத்து புதுவித மோசடி! உஷார்

15 மாத கர்ப்பம்.. சிசு கூட கர்ப்பப்பையில் இருக்காது.. இளம்பெண்களை குறிவைத்து புதுவித மோசடி! உஷார்

அபுஜா: இந்த காலத்தில் பல வித மோசடிகள் நடந்து வருகிறது. குறிப்பாக குழந்தை பெறுவதில் இப்போது பல பெண்கள் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில், அவர்களை குறிவைத்தும் மோசடி நடக்கிறது. அப்படி நடக்கும் ஒரு மோசடி சம்பவம் தான் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

குழந்தை பெற முடியாத இளம்பெண்களை தொடர்பு கொள்ளும் அவர்கள், தங்களை டாக்டர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். பெண்களை எளிதாக கர்ப்பமடைய வைக்க தங்களிடம் அதிசய சிகிச்சை முறை இருப்பதாக சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

மோசடி: இதற்காக பெரும் தொகையை கட்டணமாகவும் பெற்று ஏமாற்றுகிறார்கள். இதுபோல பல நூறு பேர் ஏமாந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நைஜீரியா நாட்டில் உள்ள இளம்பெண்களை குறிவைத்தே இந்த மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. சர்வதேச ஊடகமான பிபிசி நடத்திய சீக்ரெட் ஆபரேஷனில் பெண்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம். உலகில் அதிக குழந்தை பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக நைஜீரியா இருக்கிறது. அங்கு இப்போதும் கூட ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் அங்கு கருத்தரிக்க முடியாத பெண்கள் மிக பெரிய சமூக அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். கருவுறாமல் இருக்கும் பெண்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். எந்தவொரு நல்ல காரியங்களுக்கும் அவர்களை யாரும் கூப்பிடுவதில்லை.

சமூக ழுத்தம்: இதுபோன்ற சமூக அழுத்தத்தை தவிர்க்க எப்படியாவது கருவுற்றால் போதும் என்ற நிலைக்கு அங்குள்ள பெண்கள் தள்ளப்படுகிறார்களாம். இதன் காரணமாகவே அங்கு இவ்வளவு பெரிய மோசடியை அவர்களால் நடத்த முடிந்துள்ளது. இந்த மோசடியை வெளிச்சம் போட்டு காட்ட பிபிசி செய்தியாளர்கள் கருவுறுதல் சிகிச்சை தேடும் தம்பதிகளாக தங்களை காட்டிக் கொண்டு ரகசியமாக செனஅறுள்ளனர். அப்போது தான் கருத்தரிப்பு கிளினிக்குகளில் உள்ள மருத்துவர்களும் போலிமருத்துவர்கள் என்பது தெரிய வந்தது. பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், தன்னிடம் அதிசய சிகிச்சை இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த மர்ம சிகிச்சையில் மாத்திரைகளையும் ஊசிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட மருத்துவர்கள், இதற்கு மிக பெரிய தொகை செலவாகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

அப்படியே கருவுற்றது போல: எல்லாவற்றும் ஓகே சொன்ன உடன் சிகிச்சையை தொடங்கியுள்ளனர். சில ஊசிகளை போட்டு சிகிச்சை கொடுத்துள்ளனர். இது நடந்த சில நாட்களிலேயே அவர்களின் வயிறு பெரிதாகிவிட்டதாம். மருத்துவமனைக்கு சென்ற போது, அவ்வளவு தான் நீங்கள் கர்ப்பமடைந்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளனர். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். அதேநேரம் போலி மருத்துவர்கள் சில வினோத கண்டிஷன்களை போட்டுள்ளனர். அதாவது வேறு மருத்துவர்களிடம் போக கூடாது, கர்ப்பத்தை செக் செய்ய சோனோகிராம் டெஸ்ட் எடுக்கக்கூடாது என்று தடை விதிக்கின்றனர்.

குழந்தை கர்ப்ப பைக்கு வெளியே வளர்வதாகவும் இதனால் சோனோகிராம் சிகிச்சையில் அது தெரியாது என்பதாலேயே இந்த விதி இருப்பதாக போலி மருத்துவர்கள் கூறுகிறார்கள். 15 மாத கர்ப்பம்: பிபிசி செய்தியாளர்கள் இதுபோல போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற சில பெண்களிடம் பேசியுள்ளனர். அவர்களும் தங்களுக்கு இதே சிகிச்சை தான் நடந்ததாக கூறுகிறார்கள். குறிப்பாக ஒரு பெண் சுமார் 15 மாதங்கள் குழந்தையை சுமந்ததாகவும் கூறுகிறார். டெலிவரிக்கு மருத்துவர்கள் ஒரு டைம் சொல்வார்களாம். அப்போது மருத்துவமனைக்கு சென்றால் பிரசவ வலி வர காஸ்ட்லியான மருந்தை தர வேண்டும் என சொல்லி அதற்கும் பணத்தை பறிப்பார்களாம்.

பணம் செலுத்திய பிறகு இரண்டு வழிகளை அவர்கள் கையாள்வார்களாம். முதலில் பெண்களை மயக்கமடைய செய்ய ஊசி போடுவார்கள். மயக்கத்தில் இருக்கும் போதே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தது போல கீறலை போட்டு குழந்தை பெற்றதாக காட்டுவார்கள். இன்னும் சிலருக்கு வேறு விதமான ஊசியை போடுவார்கள். அந்த ஊசி போட்டால் உண்மையாகவே குழந்தை பெற்றுக் கொண்டது போல ஒருவித மாய தோற்றம் அவர்களுக்கு ஏற்படுமாம். குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என சொல்லி சில நாட்கள் கழித்தே பெற்றோரிடம் குழந்தைகளை காட்டுவார்களாம். என்ன நடக்கிறது: மறுபுறம் என்ன நடக்கிறது என்பது சமீபத்தில் அங்கு நடந்த ரெய்டில் கண்டறியப்பட்டது. அதாவது போலி மருத்துவர்கள் இளம் பெண்களை கடத்தி வந்து, அவர்களை விருப்பத்திற்கு மாறாக கருவுற வைக்கிறார்கள். அவர்களுக்கு பிரசவம் நடந்தவுடன், வலுக்கட்டாயமாக குழந்தைகளை பிடுங்கி ஏமாற்றிய தம்பதிகளுக்கு தந்துவிடுகிறார்களாம். இதுபோல அங்கு பல நூறு பெண்களை அவர்கள் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.