எத்தியோப்பியா: கடந்த 16 ஆண்டுகளாக ஒரு பெண் உணவு மற்றும் தண்ணீர் குடிக்காமல் உடல்நலத்துடன் உயிர் வாழ்ந்து வருகிறார்.
ஒருவேளை உணவை உட்கொள்ளவில்லை என்றாலே பலருக்கும் பயம் வந்துவிடுகிறது. உடலில் அன்றாடம் எத்தனை கலோரி தேவை என எடை போட்டுச் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். யூடியூபில் சில சாப்பாட்டு ராமன்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், ஒரு பெண் கடந்த 16 வருடங்களாக உணவு எதையும் சாப்பிடாமல் அவ்வளவு ஏன் பச்சை தண்ணீர் கூட பல்லில் படாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
இது ஏதோ பொய் செய்தியல்ல; கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செய்தி. இவர் யார்? எங்கே இருக்கிறார்? எத்தியோப்பியாவில் உள்ள ஜிம்மாவிலிருந்து 4 மணிநேரம் காரில் பயணித்தால் அமெயா என்ற சிறிய கிராமத்தை அடையலாம். அங்குதான் இந்தப் பெண் வாழ்ந்து வருகிறார். அவர் பெயர் முலுவொர்க் அம்பாவ். இவர் 10 வயதாக இருக்கும்போது ஒருநாள் சிகப்பு பருப்பு குழம்பைப் போட்டு சாப்பாடு சாப்பிட்டுள்ளார். அதுதான் அவர் கடைசியாக உண்ட சோறு. அதற்கு அப்புறம் அவருக்குப் பசியே எடுக்கவில்லை. தண்ணீர் தாகம் கூட ஏற்படவில்லை என்றால் நம்புவீர்களா? வேறு வழியே இல்லை நம்பியே ஆகவேண்டும். அவரை தேடிச் சென்று சந்தித்திருக்கிறார் உலக புகழ்பெற்ற Drew Binsky யூடியூபர்.
அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் அவரது சகோதரர்கள் என அனைவரும் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 10 வயதில் பசியை மறந்த இவர் 16 ஆண்டுகளாக ஆரோக்கியமான தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார். எத்தியோப்பியா வறுமையான நாடு. அப்படியான நாட்டில் உணவு பஞ்சம் என மக்கள் அவதிப்படுகிறார்கள். அந்தக் கவலை முலுவொர்க் அம்பாவ்க்கு ஏற்படவில்லை. அது எப்படி இத்தனை வருடங்களாக தண்ணீர் கூட குடிக்காமல் உயிர்வாழ முடியும்? இந்தப் புதிருக்கு மருத்துவர்களால் கூட இதுவரை விளக்கம் கொடுக்க முடியவில்லை. அவரை இதுவரை பல சுகாதார வல்லுநர்கள் பார்த்து பரிசோதனை செய்துவிட்டனர். அதற்கு விடை கிடைக்கவில்லை. முலுவொர்க் இதை ‘கடவுளின் செயல்’ என்கிறார்.
இவரை, இந்தியா, கத்தார், துபாயைச் சேர்ந்த மருத்துவர்கள் கூட மருத்துவ ரீதியாகப் பரிசோதித்துள்ளனர், ஆனால் அவர்களில் யாரும் அவரது இந்த விசித்திரமான நிலைக்கு விளக்கம் தரவில்லை என்கிறார் முலுவொர்க் அம்பாவ். அவரும் கவலைப்படாமல் வந்த வரை லாபம் என வாழ்ந்து வருகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, அடிஸ் அபாபாவில் உள்ள மருத்துவர்களால் அம்பாவ் பரிசோதிக்கப்பட்டார். அந்த சோதனையில் இவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது செரிமானப் பாதையில் உணவு எதுவும் இல்லை. தண்ணீர் குடித்ததற்காக அறிகுறிகள் இல்லை. அவர் சாப்பிடவே இல்லை என்பதால் குடலில் கழிவுகளும் இல்லை எனத் தெரியவந்தது.
ஆகவேதான் இவர்கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அந்தச் செய்தியை அறிந்துதான் சாகசக்காரரான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யூடியூபர் ட்ரூ பின்ஸ்கி, இவரது நாட்டிற்கே சென்று சந்தித்திருக்கிறார். பின்ஸ்கியால் நம்பவே முடியவில்லை. ‘இந்தச் செய்தி உண்மையா?’ எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறார். முலுவொர்க் அம்பாவ் இதைப் பற்றி பேசுகையில், “என் குடும்பத்துடன் நான் வசித்து வந்தேன். ஒருநாள் காலை உணவைச் சாப்பிட்டு பள்ளிக்குப் போக சொன்னார்கள். நான் சாப்பிட்டுவிட்டேன் என்றேன்.
பேச்சுக்கு நான் பாசாங்குதான் செய்தேன். அன்று முதல் தாகம் எடுக்கவில்லை. பசியே வரவில்லை” என்று கூறியுள்ளார். இதைக் கேட்கவே விசித்திரமாக உள்ளது. அம்பாவின் தோட்டக்கலை மற்றும் சமைப்பதை விரும்புகிறார், ஆனால் அவளுடைய பசி குறைந்துவிட்டது. அவர் சாப்பிடவில்லை என்பது ஆச்சரியம் என்றால், அவர் இந்த 16 ஆண்டுகளாகச் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவோ வேண்டிய தேவை ஏற்படவே இல்லை. இவருக்கு திருமணமாகிவிட்டது. அவர் கர்ப்பமடைந்தார். இவருக்குப் பசிக்காது என்பதால் சிசுவுக்கு குளுக்கோஸ் மூலம் ஊட்டச்சத்து அளிக்கப்பட்டது. நல்லபடியாக இவர் குழந்தையைப் பெற்றெடுத்தார்.அவரால் தாய்ப் பால் கொடுக்க முடியவில்லை. இந்த உலகத்தில் பலருக்கு உணவுதான் பிரச்சினை. இவருக்கோ அது ஒரு பொருட்டே கிடையாது.