மாஸ்கோ: ரஷ்யாவுக்கு மக்கள்தொகை சரிவு என்பது கடந்த சில காலமாகவே பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கிடையே அந்நாட்டின் அதிபர் புதின் ஆபாசப் படங்கள் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆபாசப் படங்களைக் காட்டிலும் மக்களை ஈர்க்கும் விஷயங்கள் தேவை என்றும் அப்போதே அதில் இருந்து விடுபட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது ஆபாசப் படங்களை மக்கள் பார்ப்பது ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆபாச படங்களை மக்கள் எளிதாக அணுகும் சூழல் நிலவுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
மக்கள் தொகை பல நாடுகளில் சரிந்து வரும் நிலையில், அதற்கும் ஆபாசப் படங்களுக்கும் கூட தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆபாசப் படங்களைத் தடை விதிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. விளாடிமிர் புதின்: இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆபாசப் படங்கள் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது ஆபாசப் படங்களுக்கு மாற்றாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சி மிக்க கன்டென்டுகளை உருவாக்க வேண்டும் என்று அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவில் மக்கள் அதிகளவில் ஆபாசப் படங்களுக்கு அடிமையாக இருப்பது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஆபாசப் படங்கள் என்பது வெறுமன ரஷ்யாவுக்கு மட்டுமான பிரச்சினை இல்லை என்றும் அது உலகெங்கும் இருக்கும் ஒரு பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆபாசப் படங்களுக்கு மாற்றுத் தேவை: இது தொடர்பாக ரஷ்யா டுடே என்ற ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “உலகம் முழுவதும் ஆபாசப் படங்களை மக்கள் காண்கிறார்கள். இது ரஷ்யாவுக்கு மட்டுமேயான பிரச்சினை இல்லை.. உலகெங்கும் இருக்கும் பிரச்சினை. ஆபாசப் படங்களை மொத்தமாகத் தடை செய்வது இதற்கான ஒரு தீர்வாக இருக்கலாம். ஆனால், அதை விட ஆபாசப் படங்களுக்கு மாற்றை நாம் தர வேண்டும். அதுவே முக்கியமானது. அதாவது தடைகளைக் காட்டிலும் அதற்கு மாற்றாக நாம் எதை முன்மொழிகிறோம் என்பது முக்கியம். ஆபாசப் படங்களைப் காட்டிலும் மக்களை ஈர்க்கக்கூடிய மற்றும் சுவாரஸ்யமான கன்டெண்டுகள் நமக்குத் தேவை” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ரஷ்யாவில் குறையும் மக்கள்தொகை: உலகின் மற்ற பல நாடுகளைப் போலவே ரஷ்யாவிலும் பிறப்பு விகிதம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ரஷ்ய மக்கள் தொகையும் மெல்லச் சரிந்து வருகிறது. மக்கள்தொகை சரிவை கட்டுப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக அவர் பல்வேறு வினோதமான ஐடியாக்களையும் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார். சமீபத்தில் கூட அவர் ரஷ்ய நாட்டு மக்கள் மதிய உணவு மற்றும் காபி பிரேக் சமயத்திலும் பாலியல் உறவுகளைக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதன் மூலம் நாட்டின் கருவுறுதல் விதத்தை அதிகரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ரஷ்யாவில் இப்போது கருவுறுதல் விகிதம் 1.5ஆக இருக்கிறது. அதேநேரம் மக்கள்தொகை நிலையாகத் தொடர கருவுறுதல் விகிதம் குறைந்தபட்சம் 2.1ஆக இருக்க வேண்டும்.
கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க ரஷ்யா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 18 முதல் 40 வயதுடைய பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகளைக் கண்டறியக் கருவுறுதல் சோதனைகளையும் இலவசமாக நடத்துவோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.