இஸ்ரேலுக்கு கைமாறிய டாப் சீக்ரெட் தகவல்.. அடுத்த நொடியே ஆரம்பித்த குண்டுமழை! சிரியாவில் என்ன நடந்தது

இஸ்ரேலுக்கு கைமாறிய டாப் சீக்ரெட் தகவல்.. அடுத்த நொடியே ஆரம்பித்த குண்டுமழை! சிரியாவில் என்ன நடந்தது

டமாஸ்கஸ்: சிரியாவில் ஹெச்.டி.எஸ் கிளர்ச்சி படையினர் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், சிரியா அதிபராக இருந்த ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். அதேநேரம் ஆசாத் வெளியேறிய உடனே சிரியாவின் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் துல்லியமான தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதற்கிடையே இஸ்ரேலின் அந்தத் துல்லிய தாக்குதல்கள் குறித்து இப்போது சில ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டிற்கு மேலாகவே மிகவும் மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இஸ்ரேல், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஓராண்டிற்கு மேலாக மோதல் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் சிரியாவிலும் உள்நாட்டு மோதல் வெடித்தது.

அங்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போராளி குழுவான ஹெச்டிஎஸ் அமைப்பினர் திடீரென உள்ளே புகுந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். இதனால் முக்கிய நகரங்கள் ஒவ்வொன்றும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சென்றது. வெறும் சில வாரங்களில் அங்கிருந்த அதிபராக இருந்த ஆசாத் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஹெச்டிஎஸ் படையினர் மளமளவென முன்னேறிய நிலையில், ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் சிரிய அதிபராக இருந்த ஆசாத் நாட்டில் இருந்தே வெளியேறினார். அவர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.

இப்படி சில வாரங்களில் சிரியாவில் நிலைமை மொத்தமாக மாறியது. கைமாறிய சீக்ரெட் ஆவணங்கள்: அதேநேரம் ஆசாத் அங்கிருந்து வெளியேறிய உடன் சிரியாவில் இருந்த ராணுவ கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் துல்லியமான தொடர் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலால் எப்படி ராணுவ கிடங்குகளைக் குறிவைத்து இந்தளவுக்குத் துல்லியமான தாக்குதல்களை நடத்த முடிந்தது என்று அப்போதே பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது.

அதாவது சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்தே தனது சொந்த நாட்டின் ராணுவ ரகசியங்களை இஸ்ரேலுக்கு வழங்கியதாகத் துருக்கி நாட்டை சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கள் ஆயுதக் கிடங்குகள் சரியாக எங்கெல்லாம் உள்ளன என்பது குறித்த தகவல்களை ஆசாத் வழங்கியதாலேயே இஸ்ரேலால் அந்தளவுக்குத் துல்லியமான தாக்குதல்களை நடத்த முடிந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆசாத் ராணுவ தகவல்களைப் பகிர்ந்தது ஏன்: கிளர்ச்சி படை முன்னேறி வருவதால் நாட்டை விட்டுத் தப்பியோட ஆசாத் முடிவு செய்திருந்தார். இருப்பினும், எங்கு தான் தப்பிச் செல்லும் போது இஸ்ரேல் போர் விமானங்கள் தனது விமானத்தைச் சுட்டு வீழ்த்தப்படுமோ என்று அஞ்சிய ஆசாத், பாதுகாப்பாக வெளியேறவே சொந்த நாட்டின் ராணுவ ரகசியங்களை இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் துருக்கி நாளிதழ் ஒன்றுக்கு அந்நாட்டின் அரசியல் விமர்சகர் அப்துல்காதிர் கூறுகையில், “ஆயுதக் கிடங்குகள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் போர் விமானங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை ஆசாத் தான் வழங்கி இருக்கிறார். தான் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் போது தனது விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்பதற்காகவே அவர் இந்த தகவல்களைப் பகிர்ந்தார்” என்றார். ஆசாத் வெளியேறும் போது என்ன நடந்தது: ஆசாத் சிரியாவில் இருந்து தப்பிச் சென்றது அவரது நெருங்கிய ஆலோசகர்களுக்குக் கூட தெரியாதாம். தனது பாதுகாப்பையும் தனது குடும்பத்தினர் பாதுகாப்பையும் உறுதி செய்ய ஆசாத் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அப்போதே தகவல் வெளியான நிலையில், அவர் என்ன மாதிரியான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.