மனித பேரவலத்தின் மௌன சாட்சியாக, யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி, நாளுக்கு நாள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தி வருகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள், 11வது நாளாக நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அரை நாள் மட்டுமே அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. எனினும், இந்த குறுகிய நேர அகழ்வு நடவடிக்கையின் போது, மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது! அவற்றில், 44 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.