கட்சி தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சி என்பதெல்லாம் உங்களுக்கு என்ன நக்கலாகத் தெரிகின்றதா?செய்து பார்க்கலாமா?விஜய்யை மறைமுகமாக விமர்சித்த லியோனி!

கட்சி தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சி என்பதெல்லாம் உங்களுக்கு என்ன நக்கலாகத் தெரிகின்றதா?செய்து பார்க்கலாமா?விஜய்யை மறைமுகமாக விமர்சித்த லியோனி!

விஜய் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அறிவித்தார். தனது விஜய் மக்கள் இயக்கம் என்ற ரசிகர்கள் நற்பணி மன்றத்தினை கட்சியாக மாற்றி அறிவிக்கும்போது மேற்கண்டவாறு கூறினார். அதேநேரத்தில் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பலருக்கு மகிழ்ச்சியும் பலருக்கு அதிர்ச்சியும் அளித்தது. இப்படியான நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திமுடித்தார். மாநாட்டில் திமுகவை மிகவும் காட்டமாக விமர்சித்தார். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி விஜய்யின் பெயரைச் சொல்லாமல், திமுக மேடையில் விமர்சித்துள்ளார்.

நடிகர் விஜய் மாநாட்டில் பேசும்போது, ” அவங்க செய்யறது பாசிசம் என்றால், நீங்க செய்யறது என்ன பாயாசமா? ஏமாற்றும் திராவிட மாடல் ஆட்சி” என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி திமுகவை விமர்சித்தார். மேலும், மாநாட்டு மேடையில் விஜய் பேசும்போது, தமிழக வெற்றிக் கழகத்தினை பலர் குழந்தை என விமர்சிக்கின்றனர். நாங்கள் குழந்தைகள்தான். ஆனால் அந்த குழந்தைக்கு பயம் தெரியாது. பாசம்தான் தெரியும். குழந்தை கண் முன் விஷப்பாம்பு இருந்தால் கூட, அந்த பாம்பினை குழந்தை பிடித்து விளையாடும். அதுபோல்தான் நாங்கள் அரசியல் எனும் பாம்பை பயமில்லாமல் பிடித்து விளையாடுவோம்” எனக் கூறினார்.

மாநாட்டில் இவர் பேசிய பல விஷயங்களை பல அரசியல் கட்சியினர் வரவேற்றனர், பல அரசியல் கட்சியினர் எதிர்த்தனர். இப்படியான நிலையில், ஆளும் திமுக தரப்பில் இருந்து எதுவுமே நேரடியாக கூறப்படவில்லை. துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாக கேட்டபோது, நான் இன்னும் விஜய்யின் மாநாட்டுப் பேச்சினைப் பார்க்கவில்லை. பார்த்துவிட்டுச் சொல்வதாகக் கூறினார்.

இப்படி இருக்கும்போது நடிகரும் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த நெப்போலியன் விஜய்யை எதிர்த்து பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் திமுக மேடையில் திமுகவில் முக்கிய அங்கம் வகிக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசும்போது விஜய் குறித்து காட்டமாக விமர்சித்தார். ஆனால் எந்த இடத்திலும் விஜய் என்ற பெயரைப் பயன்படுத்தவில்லை.

அவர் பேசும்போது, “ப்ரோ, குழந்தை பாம்பை பிடித்து விளையாடுவதெல்லாம் சரி, பாம்பு குழந்தையை ஒரு போடு போட்டால், குழந்தை வாயில் நுரை தள்ளிவிடும். மேலும் ஒரு குழந்தை பிறந்து மெல்ல மெல்ல வளர்ந்து, நடை வண்டியைப் பிடித்து நடந்து, சுவரைப் பிடித்து நடந்து, அம்மா அப்பா கைகளைப் பிடித்து நடந்து, அதன் பின்னர்தான் தனியே நடக்கும். யாரவது வீட்டில் குழந்தை பிறந்தவுடனே நடக்கவும் பேசவும் செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்களா? பயந்து போமாட்டர்களா?

கட்சி தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சி என்பதெல்லாம் உங்களுக்கு என்ன நக்கலாகத் தெரிகின்றதா? படிப்படியாக வளர்வதே வளர்ச்சி, திடீரென்று ஒரு வளர்ச்சி வருகின்றது என்றால், அது ஒருநாள் திடீரென காணாமலும் போய்விடும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். திமுகவை எதிர்த்து பலர் அரசியல் செய்துள்ளார்கள், ஆனால் அவர்கள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போயுள்ளார்கள்” எனக் கூறினார். இவரது இந்தப் பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இவர் ஏற்கனவே தனது எக்ஸ் பக்கத்தில், ” நடிகர் விஜய்யின் மாநில மாநாடு பெரிய மேஜிக் ஷோ போல் நடந்தது. 40 ஆண்டுகள் கடின உழைப்பு வெற்றி தோல்விகளை கண்டு நடிப்பில் உச்சத்தை அடைந்தீர்கள். அரசியலிலும் அப்படித்தான்.. நினைத்தவுடன் முதல்வர் ஆக முடியாது .மல்லாக்க படுத்து யோசிங்கனோவ். Rome cannot be built in a single day” என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

viajy, actor ,political, cinima news.