சீறிப்பாய்ந்த ஏவுகணை.. இஸ்ரேல் மீது மீண்டும் ஹிஸ்புல்லா ‛அட்டாக்’.. வாயை விட்ட நெதன்யாகுவால் பதற்றம்

சீறிப்பாய்ந்த ஏவுகணை.. இஸ்ரேல் மீது மீண்டும் ஹிஸ்புல்லா ‛அட்டாக்’.. வாயை விட்ட நெதன்யாகுவால் பதற்றம்

பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர், வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலுக்கு அனுமதி கொடுத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். நெதன்யாகுவின் இந்த பேச்சை தொடர்ந்து வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் 165 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பது இருநாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றன. ஈரான் ஆதரவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இருந்த மோதல் தற்போது போராக மாறி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ஹிஸ்புல்லா அமைப்பும் ஈரான் ஆதரவில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களை இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் வழியாக கொன்று குவித்து வருகிறது.

இதனால் ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் என்பது வெடித்துள்ளது. இதற்கிடையே தான் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பினர் 165 ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள பிஸ்னா டவுனை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக ஏவுகணை தாக்குதலை அலர்ட் செய்யும் சைரன்கள் ஒலிக்க தொடங்கின. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறியபடி ஓடினர். இந்த தாக்குதலில் ஒரு வயது பெண் குழந்தை, 27 வயது பெண், 35 வயது ஆண் உள்பட மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதல் என்பது தற்போது இஸ்ரேல் – லெபனான் இடையே பெரும் பதற்றத்தை உருவாகி உள்ளது. ஏனென்றால் முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர், வாக்கி டாக்கி உள்ளிட்டவை அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் இதில், ஹிஸ்புல்லா இயக்கத்தை சேர்ந்த 40 பேர் பல்யானதோடு, 3 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த பேஜர் தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்ரேல் நாட்டின் மொசாட் எனும் உளவு அமைப்பு உள்ளது. அந்த அமைப்பு தான் தாக்குதலை நடத்தி இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது. அதோடு பழிவாங்காமல் விட மாட்டோம் என ஹிஸ்புல்லா கூறியது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டு பற்றி இஸ்ரேல் எந்த தகவலையும் கூறாமல் மவுனம் காத்து வந்தது.

இதற்கிடையே தான் நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய விஷயத்தை கூறினார். லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் மீது பேஜர் தாக்குதல் நடத்த அனுமதி வழங்கியதாக கூறினார். முதல் முறையாக ஹிஸ்புல்லாக்களின் பேஜர் தாக்குதலை நடத்தியது நாங்கள் தான் என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. நெதன்யாகுவின் இந்த ஒப்புதல் பேச்சை தொடர்ந்து தான் ஹிஸ்புல்லாக்கள் கடும் கோபமடைந்தனர். இத்தகைய சூழலில் தான் அடுத்த நாளே இஸ்ரேல் மீது 165 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.