இலங்கையில் அதிபர் தேர்தலை தொடர்ந்து, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ஜேவிபி கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றியடைந்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றிருக்கிறார். அதேபோல புதிய அமைச்சரவையும் அதிபர் அநுர குமர முன்னிலையில் பொறுப்பேற்றிருக்கிறது
இலங்கையின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமானதாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் இது ஆபத்தான நிலையை நோக்கி சரியலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென அந்நாட்டின் மொத்த பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை கூட தாறுமாறாக உயர்ந்தன. எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது ஏற்கெனவே ஏறியிருந்த விலைவாசியை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் சங்கிலி தொடராக அமைந்து இலங்கையை மொத்தமாக முடக்கியது. எனவே மக்கள் பெரும் கோபம் கொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகம் செய்தனர். அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்டதால், அப்போதைய அதிபராக இருந்த ராஜபக்ச தப்பி ஓடிவிட்டார். எனவே புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்று நாட்டை வழி நடத்தினார்.
ஆனாலும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்கிற கதையாக, இலங்கையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தது. இப்படி இருக்கையில்தான் அதிபர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது. தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் கட்சி, ரணிலின் கட்சி உள்ளிட்டவை களமிறங்கியது. அதேபோல, இடதுசாரி கட்சியான ஜேவிபி கூட்டணியுடன் களமிறங்கியது. தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜேவிபி பெரும்பான்மை பெற்றது. அதிபர் வேட்பாளரான அநுர, மக்களின் தீர்ப்பை ஏற்று அதிபராவதாக அறிவித்தார். மட்டுமல்லாது உடனடியாக நாடாளுமன்றத்திற்கு தேர்தலையும் அறிவித்தார்.
நாடாளுமன்ற எம்பிக்களின் பதவிக்காலம் முடிய இன்னும் 11 மாதங்கள் இருந்தபோதும், அவர் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். உத்தரவையடுத்து தேர்தலும் நடந்து முடிந்தது. அநுர எதிர்பார்த்ததை போல, நாடாளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சியே வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றிருக்கிறார். இதன் மூலம் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்கிற பெயரை ஹரிணி பெற்றிருக்கிறார்.
இதற்கு முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் பெண் பிரதமர்களாக பதவி வகித்திருக்கின்றனர். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஹரிணி, சுமார் 6.55 விருப்ப வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கையில் நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் இதுதான். இதற்கு முன்னர் கடந்த 2020 பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச 5.2 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இதுவே இதற்கு முன்னர் நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாக பார்க்கப்பட்டது. புதிய பிரதமர் பதவியேற்பை தொடர்ந்து நவ.21ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்புரையாற்றும் அநுர, தனது அரசின் செயல் திட்டத்தையும் முன்மொழிய உள்ளார். இதில்தான் இலங்கை அரசு நெருக்கடியை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது பற்றி தெரிய வரும்.