ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் கடந்த சில நாட்களில் மீண்டும் உச்சம் தொட்டு இருக்கிறது. தனது நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில், போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டு இருக்கிறார்.
கடந்த சில காலமாகவே உலகில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. மத்திய கிழக்கு, சீனா தைவான், உக்ரைன் ரஷ்யா என உலகெங்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது.
குறிப்பாகக் கடந்த ஓராண்டாக மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் குறித்தே உலக நாடுகள் கவனித்து வந்தன. இதற்கிடையே கடந்த சில நாட்களில் உக்ரைன் ரஷ்யா மோதல் மிக மோசமான நிலைக்குப் போய்விட்டது.
ரஷ்யா: கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் வெடித்தது. முதலில் ரஷ்யா போரை வெல்வது போலத் தெரிந்தாலும் அதன் பிறகு உக்ரைன் திருப்பி அடிக்க தொடங்கியது. இதனால் போர் ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது. ரஷ்யாவைச் சமாளிக்க உக்ரைனுக்கு உலக நாடுகள் உதவின. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல ஆயுதங்களை வழங்கின.
அமெரிக்கா என்ன தான் ஆயுதங்களை வழங்கினாலும் அதை இஷ்டப்படி உக்ரைனால் பயன்படுத்த முடியாது. ரஷ்யத் தாக்குதல்களுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், உக்ரைன் நீண்ட காலமாகவே தாக்கும் வகையிலான ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயணப்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா மிக முக்கியமான ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
சம்மதம்: அதாவது தனது நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது. இந்த ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவின் உள்பகுதிகளுக்கும் கூட சென்று உக்ரைனால் தாக்குதல் நடத்த முடியும். அமெரிக்காவின் இந்த முடிவு பலருக்கும் வியப்பைத் தருவதாகவே இருந்தது. குறிப்பாக ரஷ்ய வல்லுநர்கள், அமெரிக்காவின் இந்த முடிவு உலகப் போரைத் தொடங்கிவிடும் என்றும் கூட எச்சரித்தனர்.
அணு ஆயுதங்கள்: இதற்கிடையே போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ ஆதரவை அதிகரித்து இருப்பதால்.. தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் ரஷ்யாவின் பாலிசிக்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன காரணம்: இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “தேவையான திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம். எப்போது எது தேவையோ அதன்படி அது செயல்படுத்தப்படும்.
அமெரிக்கா தனது ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இது எங்கள் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையை ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்றார். அமெரிக்க ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “எங்கள் ராணுவம் நிலைமையை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது” என்று மட்டும் பதிலளித்தார். ரஷ்யா அணுசக்தி தாக்குதல்களை நடத்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “எங்களுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் விருப்பம் இல்லை.. அணு ஆயுதங்களைத் தடுப்பதற்கான வழிமுறையே எப்போதுமே யோசித்து வந்துள்ளோம். இருப்பினும், நிலைமை கையை மீறி போனால் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.