472 வருடம் கெடாத உடல்! யார் இந்த பாதர்? 8 மில்லியன் பக்தர்கள் கோவாவுக்கு பயணம்

472 வருடம் கெடாத உடல்! யார் இந்த பாதர்? 8 மில்லியன் பக்தர்கள் கோவாவுக்கு பயணம்

கோவா: புனிதர் பிரான்சிஸ் சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடலை நேரில் காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்துவ மக்கள் கோவாவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

கோவா மாநிலத்தில் உள்ள பழமையான தேவாலயம் Basilica of Bom Jesus. இங்கே புனிதர் பிரான்சிஸ் சேவியர் என்ற இறைப் பணியாளரின் உடலை கடந்த 472 வருடங்களாகப் பதப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால், அவரது உடலை அனைத்து நேரமும் பார்க்க முடியாது. அதற்காக ஒரு கண்காட்சியை இந்தத் தேவாலயம் சார்பாக நடத்தப்படும். அப்போது மட்டுமே உலகம் எங்கிருந்தும் மக்கள் காண்பதற்கு அனுமதி அளிக்கப்படும். அதன்படி 18 ஆவது கண்காட்சி இப்போது தொடங்கியுள்ளது. இந்த பாதரின் உடலை வரும் 2025 ஜனவரி 5 ஆம் தேதி வரை காணலாம்.

கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையான உடல் என்பதால் மிகவும் கவனமாக பாசிலிக்காவில் உள்ள கல்லறையில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் எனத் தேவாலய அதிகாரிகள் எதிர்பார்க்கிறனர். கடந்த 2014 நடத்த கண்காட்சிக்கு சுமார் 5.5 மில்லியன் மக்கள் வருகை தந்திருந்தனர்.

அதைவிட இந்த ஆண்டு அதிக பக்தர்கள் வருவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாடிகன் வலைத்தளத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் கழித்து உடலைப் பார்க்க அரிய சந்தர்ப்பம் என்பதால் மக்கள் அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனர் இது குறித்து டெல்லி பேராயர் அனில் குடோ, “ஏசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகம் முழுவதும் அறிவிப்பதே புனித பிரான்சிஸ் சேவியர் ஒரு பணியாக இருந்தது. அதற்காகக் கிராமம் தோறும் அலைந்தார். வீடு வீடாகப் போய் மக்களைச் சந்தித்தார். ஜெபத்திற்காக நீண்ட காலத்தை அவர் செலவிட்டார். அவர் மறைந்து 470 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன. அவரது உடல் இதுவரை அழியாமல் உள்ளது. அவர் உடலிலிருந்து துர்நாற்றம் வரவே இல்லை.

இவர் மார்ச் 1554 இன் நடுப்பகுதியில் ஷாங்சுவான் தீவிலிருந்து மலாக்கா வழியாகக் கப்பலில் கோவா வந்தடைந்தார். அவர் மறைந்தும் பக்தர்கள் அவரைக் காண இன்றும் லட்சக்கணக்கில் வருகை தந்துவருகின்றனர்” என்று கூறியுள்ளார். கோவாவைச் சேர்ந்த குரூஸ் கார்டோசோ பேசுகையில், “இந்தக் கண்காட்சி கோவா மக்களின் ஒரு பாரம்பரிய அடையாளம். பிரான்சிஸ் சேவியர் நேசித்த கொள்கைகளால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம். எங்கள் வரலாற்றுடன் உள்ள தொடர்பை இதன் மூலம் மறுபடியும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஜோதி பர்சேகர் பேசுகையில், “புனித பிரான்சிஸ் சேவியருக்கு அஞ்சலி செலுத்தவும், துறவியின் ஆசிகளைப் பெறவும்தான் நாங்கள் வந்துள்ளோம்” என்று கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், “இது நான் கலந்து கொள்ளும் முதல் கண்காட்சி. முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. நடைபெற்ற ஊர்வலத்தின் போது திருவுருவ உடலைக் காண முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.