இஸ்கான் அமைப்பை தடை செய்ய முடியாது.. வங்கதேச நீதிமன்றம் திட்டவட்டம்.. குறிவைக்கப்படும் இந்துக்கள்?

இஸ்கான் அமைப்பை தடை செய்ய முடியாது.. வங்கதேச நீதிமன்றம் திட்டவட்டம்.. குறிவைக்கப்படும் இந்துக்கள்?

டாக்கா: வங்கதேசத்தில் இஸ்கான் துறவி கைதை தொடர்ந்து அங்கு இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதற்கிடையே இஸ்கான் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதால் தடை விதிக்க முடியாது என்று வங்கதேச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பல மாதங்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. கடந்த ஆக. மாதம் வன்முறை மிக மோசமாகப் போன நிலையில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இஸ்கான்: அங்கு இடைக்கால அரசு பொறுப்பேற்ற சூழலில், நிலைமையை நார்மல் ஆக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைதை தொடர்ந்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்துக்களைக் குறிவைத்து இந்த வன்முறை நடப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்நாட்டின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம்டி மோனிர் உதீன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த செய்திகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அவர், சட்டோகிராம், ரங்பூர் மற்றும் தினாஜ்பூரில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

நீதிமன்றம்: இஸ்கான் தொடர்பான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அட்டர்னி ஜெனரலை அந்நாட்டு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அப்போது வியாழக்கிழமை, வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிஃப் கொலை மற்றும் இஸ்கான் செயல்பாடுகள் தொடர்பாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அட்டர்னி ஜெனரல் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை அமல்படுத்தவும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது. அதேநேரம் இஸ்கான் அமைப்புக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

புதிய மனு: இதற்கிடையே வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பைத் தடை செய்யக் கோரி புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வங்கதேச தேசியப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மற்றும் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் இஸ்கான் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வங்கதேச உள்துறை அமைச்சகம், சட்டத் துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகியோருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இஸ்கான் அமைப்பைத் தீவிர அமைப்பு என்று டாக்கா ட்ரிப்யூன் குறிப்பிட்டுள்ளது. இஸ்கான் அமைப்பு மதவெறி வன்முறையைத் தூண்டுவதாகவும் மத சகிப்புத்தன்மையைக் கெடுப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்: சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அதில் இஸ்கான் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் முக்கியமானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.