வாஷிங்டன்: பிரைவசி அதாவது தனியுரிமை என்றாலே இங்குப் பலருக்கும் நினைவுக்கு வருவது ஆப்பிள் தான். அந்தளவுக்கு ஆப்பிள் வாடிக்கையாளர்களின் டேட்டாவை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. இதற்கிடையே ஆப்பிள் நிறுவனமே பெர்சனல் சாதனங்களில் கூட சாப்ட்வேர் மூலம் உளவு பார்த்ததாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
உலகில் என்னதான் பல நூறு மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் இருந்தாலும், உலகளவில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் என்றால் அது ஆப்பிள் நிறுவனம் தான்.
குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் டேட்டாவை பாதுகாப்பாக வைத்திருப்பதாகப் பலரும் புகழ்ந்து தள்ளுவார்கள். இதற்கிடையே பிரைவசிக்கு பெயர்போன ஆப்பிள் நிறுவனமே இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
உளவு பார்க்கும் ஆப்பிள்: அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் பெர்சனல் சாதனங்களையும் ஐ-கிளவுட் கணக்குகளையும் கூட சட்டவிரோதமாக உளவு பார்ப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் ஊதிய உயர்வு மற்றும் வேலை சூழல் குறித்துப் பேசுவதையும் தடுப்பதாக ஆப்பிள் நிறுவனம் குற்றஞ்சாட்டுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் விளம்பர பிரிவில் பணிபுரியும் அமர் பக்தா என்பவர் கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். அதில் அவர் ஆப்பிள் நிறுவனம் அலுவலக ரீதியான சாதனங்கள் மட்டுமின்றி பெர்சனல் கருவிகளிலும் குறிப்பிட்ட சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யக் கட்டாயப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார். இது தங்கள் மின்னஞ்சல், போட்டோ, ஹெல்த் செயலி, அவ்வளவு ஏன் ஸ்மார்ட் ஹோம் கட்டமைப்பைக் கூட கண்காணிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பல கட்டுப்பாடுகள்: இது மட்டுமின்றி வேலை செய்யும் சூழல் குறித்து ஊடகங்களிடம் தகவல் பகிர்வது, முறைகேடு நடந்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் விசில்ப்ளோயிங்கி ஆகியவற்றில் ஈடுபடுவதைக் கூட ஆப்பிள் நிறுவனத்தின் பாலிசிக்கள் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்யும் பக்தா தனது வேலை முறை குறித்து பாட்காஸ்ட் செய்து வருகிறார். அதில் அவரது வேலை குறித்து எதுவும் பேசக்கூடாது என்று ஆப்பிள் நிறுவனம் தடை விதித்துள்ளது. மேலும், வேலை சூழல் குறித்து சமூக வலைத்தளங்களில் போட்ட போஸ்ட்களையும் நீக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது. உரிமை பறிப்பு: இதன் காரணமாகவே அவர் வழக்கைத் தொடர்ந்துள்ளார். அதில் அவர், “ஆப்பிள் நிறுவனத்தின் கண்காணிப்புக் கொள்கைகள் அதிர்ச்சி அடைய வைப்பதாக இருக்கிறது. அது சட்டத்திற்குப் புறம்பாக உள்ளன. ஊழியர்களின் விசில்ப்ளோயிங், பணியாளர்களின் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் என அனைத்தையும் தடுக்கிறது” என்று கூறியுள்ளார்.
பிரைவசிக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராகவே இந்த வழக்கு தொடரப்பட்டது பேசுபொருள் ஆகியுள்ளது. இதற்கிடையே ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் இதற்குப் பதிலளித்துள்ளார். அதில் அவர், “வழக்கில் உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது. வேலை செய்யும் சூழல் தொடர்பாகப் பேச ஆண்டுதோறும் நாங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். உலகின் சிறந்த கருவிகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இதில் விதிமீறல்கள் எதுவும் இல்லை” என்று கூறியிருந்தார். முதல்முறை இல்லை: அதேநேரம் ஆப்பிள் நிறுவனத்தின் மீது இதுபோல வழக்கு வருவது இது முதல்முறை இல்லை. கடந்த மே மாதம் தான் ஆப்பிள் நிறுவனம் தங்களிடம் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்குக் குறைந்த ஊதியம் கொடுத்து பாகுபாடு காட்டுவதாக இரண்டு பெண்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதேபோல ஊடகங்களிடம் பேச ஆப்பிள் தடை விதித்துள்ளதாகவும் 3 பேர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.