சென்னை: திருவண்ணாமலை மக்கள் நிலச்சரிவில் சிக்கி தங்களின் வீடுகளை இழந்து பரிதவித்துவரும் நிலையில், விஜய் அறிக்கை மட்டும் விட்டுவிட்டு அமைதியாக இருப்பதுதான் மாற்றத்திற்கான ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியை மொத்தமாகப் புரட்டிப் போட்டு உள்ளது. கிட்டத்தட்ட 7 பேர் மண் சரிவில் புதைந்து உயிரிழந்துள்ளனர். அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெறவே இல்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டி மறியல் செய்து வருகின்றன.
மாற்றுத் துணிக்குக்கூட வழியில்லாமல் 150 குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. அமைச்சர்கள், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் பாதிப்பை நேரில் சென்று பார்த்து ஆய்வு நடத்தியுள்ளனர். தொடர்ந்து மண் சரிவில் புதைந்த உடல்களை மீட்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பலரும் தங்களின் உறவினர்களைக் காணவில்லை என்று கண்ணீர் வடித்து வருகின்றனர்.
ஆளும் கட்சிக்கு அதிக பொறுப்பு உண்டு என்பதால், அவர்கள் களத்தில் இருப்பது கட்டாயம் என்பது மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஆள வேண்டும் என்ற கனவுடன் மாநாடு நடத்திய விஜய் இதுவரை களத்திற்குப்போகாமல் அறிக்கை மட்டுமே விட்டுள்ளார். அவர் திருவண்ணாமலை நிலச்சரிவு பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது” என்று சொல்லி இருக்கிறார்.
வார்த்தைகள் மூலம் அறிக்கை வெளிப்படுத்தும் பதற்றம் அவரது நடவடிக்கைகளில் இருக்கிறதா? என்பது மிகப்பெரிய கேள்வி. ஆளும் கட்சியாக அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பவர், மக்கள் துயரங்களில் துணையாகப் போய் அழைக்காமலே நிற்கவேண்டும். அதுதான் அழகான தலைமைக்கு அடையாளம். நான் அறிக்கை கொடுத்துவிட்டேன். ஆகவே அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும் என வெளியே தலைகாட்டாமல் இருப்பது எந்த வகையில் நியாயம் எனப் பலரும் கேட்கிறார்கள். அவர் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாட்டில் கோட்டையை செட்டு போட்டு அமைத்திருந்தார்.
அந்தக் கோட்டைக்குப் போக விரும்பும் அவர் அரசியல் களத்தில் இறங்கு தன்னை நிரூபிக்கவேண்டும். உங்கள் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன் எனக் காட்டவேண்டும். “நாங்கள் வெறும் வார்த்தைகளைப் பேசி அரசியல் செய்ய வரவில்லை. செயலில் காட்டுவோம்” என்று மாநாட்டில் பேசினார் விஜய். மாநாடு முடிந்து 1 மாதம் முழுமையாக முடிந்துவிட்டது. இதுவரை அவர் செயலில் காட்டியது என்ன? அவர் களத்தில் போய் நின்ற நிகழ்வுகள் என்ன? என்பதைப் பற்றி யோசிக்க வேண்டுமா? வேண்டாமா?
“அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். மீட்புப் படையினரின் பணி அளப்பரியது. அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆற்றங்கரையோர மக்களைப் பாதுகாப்பான பகுதிக்கு இடம் மாற்ற வேண்டும்” என்று அறிக்கையில் கூறியுள்ளார் விஜய். இந்த நடவடிக்கைகளை எல்லாம் கடந்த 75 ஆண்டுகளாக ஒவ்வொரு அரசும் எடுத்துக் கொண்டுதான் வருகிறது. அதை அறிக்கையாகச் சொல்ல ஒரு புதிய கட்சியும் தலைவரும் தேவையா? அரசுக்கு அறிவிப்பு கொடுத்த விஜய் தன் கட்சியினருக்கு என்ன கட்டளைகளை விதித்தார்?
அவர்களைக் களத்திற்குப் போய் உதவிகளைச் செய்யச் சொல்லி என்ன உத்தரவுகளை விதித்தார்? அப்படி ஒரு விசயமும் அவரது அறிக்கையில் இல்லையே? ஆட்சிக்கு வந்தால்தான் ஒருவேளை இந்த நிவாரண பணிகளை எல்லாம் பார்வையிட முதல்வராக விஜய் வெளியே வருவாரா? ஏதோ அவர் அறிக்கைக் கொடுத்தால் வியூவ்ஸ் அதிகம் போகிறது என்பதற்காகப் பல ஊடகங்கள் ‘மனம் வருந்திய விஜய்’ என்றும் ‘கண்கலங்கிய விஜய்’ என்று தலைப்பு வைத்து அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்படி செய்தியை வெளியிடுகின்றன. அவர் ஏன் களத்திற்கே வருவதில்லை எனக் கேள்வி எழுப்புவதே இல்லை. அவருக்கு அடுத்து உள்ள பொதுச்செயலாளர் ஆனந்த் போய் நிவாரணப் பணிகளைப் பார்வையிடலாமே?
அதற்கும் விஜய் உத்தரவு வரும் வரை காத்திருப்பார்களா? கடந்த 17 டிசம்பர் 2023 தமிழ்நாட்டில் உள்ள தென்மாவட்டங்களை மழை வெள்ளம் புரட்டிப் போட்டது. பல நகரங்கள் முடங்கிப் போயின. அதற்கும் அறிக்கைதான் விட்டார் விஜய். அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் வெளியேறி பங்கு வெயில் பல்லைக் காட்டிக் கொண்டு அடிக்கும் நேரம் பார்த்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு உதவத் தூத்துக்குடிக்குப் போனார். அதாவது வெள்ளம் வந்தது 17 ஆம் தேதி. விஜய் போய் நிவாரணம் வழங்கியது 30 ஆம் தேதி. அங்கே உதவி பெற வந்த மக்களில் சிலர் அவர் கொடுத்த பாய் தலையணையை அங்கேயே போட்டுவிட்டு செல்பி எடுத்துக் கொண்டு போனார்கள். அது தொடர்பாக வீடியோ வெளியானது. அதில் விஜய் மிரண்டு போய் அந்த மக்களைப் பார்த்தார்.
உதவி என்பது அவசரக் காலத்தில் தரப்படுவது. அதுதான் மக்களுக்குப் பயனளிக்கும். 10நாட்கள் கழித்துக் கொடுத்தால் இதைப் போல ஓரமாக வைத்துவிட்டு செல்பிதான் எடுப்பார்கள். அதை விஜய் புரிந்து கொண்டிருந்தால் இப்போது திருவண்ணாமலைக்குப் போய் இருப்பார். அங்கே களத்திலிருந்து உண்மைகளை நேரடியாகப் பார்த்து ஆளும் கட்சியின் குறைகளைச் சுட்டிக் காட்டி விமர்சித்திருப்பார். களத்திற்குப் போகாமலே ஒரு அறிக்கை என்ன விசயத்தைச் சொல்லிவிடும்? எப்படி மக்களிடம் நெருங்கும் கட்சி?
கூத்தாடி என்று சொல்கிறார்கள் என்று கவலைப்படுகிறார் விஜய். அதே குற்றச்சாட்டைக் காங்கிரஸ் ஒரு காலத்தில் திமுக மீது சுமத்தியது. 1953இல் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது திமுக சின்ன கட்சி. ஆனால், அப்போது மிகப்பெரிய புயல் பாதிப்பு சென்னையில் நடந்தது. அப்போது திமுக களத்தில் நின்றது. புயல் நிவாரண நிதிக்காக நாடகங்களைப் போட்டு வசூல் செய்தது. மக்களைக் கண்ணீரிலிருந்து மீட்க அந்தக் கட்சி களத்திலிருந்தது. இன்று திமுகவை வீழ்த்த நினைக்கும் விஜய், இதைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு கள அரசியலில் ஈடுபட்டு இருக்கவேண்டாமா? என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது. இன்னும் 10 நாட்கள் கழித்து விஜய் திருவண்ணாமலைக்குப் போகலாம். அப்போது அந்த மக்களுக்கு நிவாரணம் தேவைப்படாது.
விஜய்யுடன் ஒரு செல்பிக்கு அவர்கள் அடித்துக் கொள்ளலாம். தூத்துக்குடியில் நடந்த அதே கதை இங்கேயும் நடக்கலாம். அரசியல் என்பது வெறும் அறிக்கையில் இல்லை. அடிமட்ட மக்களின் துயரத்துடன் கலந்தது அது. அதை விஜய் இதுவரை புரிந்துகொண்டதற்கான அறிகுறி அவர் செயலில் தெரியவே இல்லை என்பது சோகம்தான்.