ரஷ்யா + ஈரான்.. சிரியா அதிபருக்காக களமிறங்கிய நாடுகள்! அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்யா + ஈரான்.. சிரியா அதிபருக்காக களமிறங்கிய நாடுகள்! அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

வாஷிங்டன்: சிரியா உள்நாட்டு போரில் அந்த நாட்டு அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் களமிறங்கி உள்ளன. ஆனால் சிரியாவிலேயே 1,000 படை வீரர்களை வைத்திருக்கும் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதுபற்றி அந்த நாட்டு அதிகாரிகள் முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் சிரியா அதிபராக பஷர் அல் அசாத் உள்ளார். தற்போது அங்கு உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியாவில் செயல்பட்டு வரும் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் அதிபர் பஷர் அல் அசாத்தை எதிர்த்து வருகின்றனர்

இந்த கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் 2வது பெரிய நகராக அறியப்படும் அலெப்போவை கைப்பற்றி உள்ளனர். தற்போது கிளர்ச்சியாளர்களும், அதிபர் பஷர் அல் அசாத்தின் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. அலெப்போ நகரை தொடர்ந்து இட்லிப் நகர், ஹமா மாகாணத்தில் உள்ள பிற நகரங்களை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் களமிறங்கி உள்ளன. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷ்யா போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. அதேபோல் ஈரானும் தனது ஆதரவு அமைப்பை ஈராக்கில் இருந்து சிரியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளது. இதனால் சிரியா உள்நாட்டு போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் சிரியா உள்நாட்டு போரில் அமெரிக்கா மவுனம் காத்து வருகிறது. தற்போது சிரியாவில் அமெரிக்க படையை சேர்ந்த 1,000 பேர் உள்ளனர். ஐஎஸ் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்காக அவர்கள் சிரியாவில் முகாமிட்டுள்ளனர். ஆனால் தற்போது வரை அமெரிக்க படையினர் உள்நாட்டு போரை கண்டுக்கொள்ளாமல் அமைதியாக இருக்கின்றனர்.

இதுபற்றி அமெரிக்காவின் பெண்டகன் செய்தி தொடர்பு செயலாளரான மேஜர் ஜெனரல் பட் ரைடர் கூறுகையில், ‛‛சிரியாவின் வடமேற்கு நகரான அலெப்போவில் நடக்கும் விஷயத்தில் அமெரிக்கா எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இது பயங்கரவாதி என அடையாளம் காட்டப்பட்ட ஹயாத் தாஹிர்அல் ஷாம் எனும் அமைப்பின் மூலம் தான் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது” என்றார்.

அதேபோல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், ‛‛சிரியா ஆட்சிக்கு எதிராக மோதலை தொடங்கி உள்ள அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதேவேளையில் ரஷ்யா, ஈரான், ஹெஸ்புல்லா ஆதரவுடன் பஷர் அல் அசாத்தின் அரசு சில அழுத்தங்களை சந்திக்கிறது. அதுபற்றி நாங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. தற்போதைய சூழல் என்பது சிக்கலான நிலை. சிரியாவில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்குள்ள பிராந்திய பார்ட்னர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்” என்றார்.