சென்னை: அம்பேத்கர் பற்றிய சர்ச்சையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிளப்பியுள்ள நிலையில், அம்பேத்கரைப் பற்றிய டாப் 10 தகவல்களை அறிந்து கொள்வோம்.
அம்பேத்கரைப் பற்றி அமித்ஷா பேசிய பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இன்றைக்கு ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. அதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைச் சொன்னால், அடுத்த 7 பிறவிக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்” என்று விமர்சித்திருந்தார்.
இவரது பேச்சைக் கண்டித்து அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ‘ஜெய்பீம்..ஜெய்பீம்..’ என்று கோஷம் எழுப்பினர். இந்த அமளியால் அவை நாள் முழுவதும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. அமித்ஷாவின் பேச்சுக்கு தவெக தலைவர் விஜய் தனது மவுனம் கலைத்து முதன்முறையாக பாஜகவை அமைச்சரைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். பலரும் அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்ததால் நேற்று மாலை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித்ஷா, “அம்பேத்கரை அவமதிக்காத கட்சியைச் சேர்ந்தவன் நான். முன்பு ஜனசங், அடுத்து பாஜக. இந்த இரண்டும் அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக்கொண்ட கட்சிகள். காங்கிரஸ் என் பேச்சைத் திரித்துக் கூறிவருகிறது. என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறார் மல்லிகார்ஜுன கார்கே. இன்னும் 15 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் இப்போது உள்ள (எதிர்க்கட்சி) இருக்கையில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்தியா விடுதலைப் பெற்றும் அம்பேத்கரை இன்னும் ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராகவே பலரும் கருதி வருகின்றனர். உண்மையில் அவர் இந்த இந்திய மக்கள் அனைவருக்குமான தலைவர். இந்தியாவின் பொருளாதாரத்தின் முன்னோடி அம்பேத்கர்தான் என நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் சொல்லி இருக்கிறார்.
அப்படி என்ன செய்துவிட்டார் அம்பேத்கர்? அவரைப் பற்றிய சில முக்கியமான டாப் 10 உண்மைகளை அறிந்துகொள்வோம்.
நம்பர் 1: பலரும் ஆங்கிலத்தில் Ambedkar என்றும் தமிழில் அதை அம்பேத்கர் என்று எழுதி வருகின்றனர். அவரது உண்மையான பெயர் Ambedkar அல்ல. Ambadvekar. அதாவது டாக்டர் பீமா ராவ் அம்பேத்கர். இது நாளடைவில் மறுவி அம்பேத்கர் என ஆகிவிட்டது. இந்தியாவில் நிலவிய தீண்டாமைக் கொடுமையைச் சிறுவயதில் அனுபவித்த இவர், பிற்காலத்தில் இந்தியாவின் சட்ட மேதையாக உருவாகினார்.
நம்பர் 2: அம்பேத்கர் 1955 ஆம் ஆண்டு பீகாரையும் மத்தியப் பிரதேசத்தையும் இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டி ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. இவரது யோசனை 45 ஆண்டுகள் கழித்து செயல்வடிவம் பெற்றது.
நம்பர் 3: சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவர் டாக்டர் அம்பேத்கர். பெண்களின் உரிமைகளை ஆதரிக்கும் அவரது மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ஆகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நம்பர் 4: அம்பேத்கர் 1952 மற்றும் 1954 ஆகிய பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். ஆனால் ஒருமுறைகூட அவர் வெற்றி பெறவில்லை என்பதே கசப்பான உண்மை.
நம்பர் 5: புது தில்லியில் நவம்பர் 27, 1942 அன்று, நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 7வது அமர்வின் போது,அம்பேத்கர் தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் இந்தியாவில் தொழிலாளிகளின் வேலை 14 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்க வழிவகுத்தது.
நம்பர் 6: வெளிநாட்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர்தான். இந்தியாவில் பெண் தொழிலாளர்களுக்கான பல சட்டங்களை உருவாக்குவதற்கு இவரே முன்னோடியானவர்.
நம்பர் 7: சாதிய பிரச்சினைகளை தாண்டி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நீர்வள மேம்பாட்டிற்கும் நிறையப் பங்களிப்பு செய்துள்ளார். தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம், ஹிராகுட் திட்டம், சோன் நதி பள்ளத்தாக்கு திட்டம் ஆக்கியவற்றை வடிவமைத்து திட்டங்களைத் தீட்டியவர் இவர் என்பது பலருக்கும் தெரியாது. இவர்தான் 1942 இல் இந்தியப் புள்ளிவிவரச் சட்டத்தை நிறைவேற்றினார்.
நம்பர் 8: ஹில்டன் யங் கமிஷனுக்கு அம்பேத்கர் வழங்கிய யோசனைகளின் அடிப்படையில்தான் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிறுவப்பட்டது. மேலும் ஊழியர்களுக்கான மாநில காப்பீட்டுத் திட்டம் (ESI), தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி (DA) சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம் ஆகிய பல சட்டங்களை உருவாக்கியவர். பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர் அம்பேத்கர். சுரங்க மகப்பேறு சலுகைச் சட்டம், பெண்கள் தொழிலாளர் நல நிதி, பெண்கள் மற்றும் குழந்தைகள், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் எனப் பல மாற்றங்களுக்கு விதை போட்டவர். இந்தியாவின் தந்தை என்றால் பலரும் மகாத்மா காந்தியைச் சொல்வார்கள். உண்மையில் இந்தியாவுக்கு இரண்டு தந்தைகள் உண்டு. சுதந்திரத்திற்கு முன் மகாத்மா காந்திதான் தேச தந்தை. இந்தியா விடுதலைப் பெற்று அரசியலமைப்புச் சட்டம் உருவான பின்னர் இன்று உள்ள இந்தியா அம்பேத்கர் இந்தியா. ஆகவே, விடுதலை இந்தியாவின் தந்தை அம்பேத்கர்தான்.
நம்பர் 9: இந்து மதத்தில் பல தீண்டாமைகளை இளம் வயதிலிருந்தே அனுபவித்து வந்த அம்பேத்கர் அக்டோபர் 14, 1956 அன்று, நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமியில் புத்த மதத்தைத் தழுவினார். இந்தநாள் தர்ம சக்ர பிரவர்த்தன் தினம் என்று அழைக்கப்படுகிறது
நம்பர் 10: அம்பேத்கர் டிசம்பர் 6, 1956 அன்று மறைந்தார். அவரை தகனம் செய்த இடத்தை சைத்ய பூமி என அழைக்கின்றனர். இதுவே அவரது நினைவிடமாகும். இந்த நாள் மகாபரிநிர்வாண தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.