காலி சிறையில் இரு குழுக்கள் இடையே மோதல்

காலி சிறையில் இரு குழுக்கள் இடையே மோதல்

 

காலி சிறைச்சாலையில் இன்று (19) காலை இரு கைதிகள் குழுக்கள் இடையில் இடம்பெற்ற மோதலின் போது கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கிடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.

“பட்டு மீயா” என்ற அனுர புஷ்பகுமார என்ற குற்றவாளியின் தரப்புக்கும் கரந்தெனிய சுத்தா என்ற குற்றவாளியின் தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, “பட்டு மீயா” என்ற கைதியும் அவரது சகாக்கள் மூவரும் காயமடைந்தனர்.

மீட்டியகொட பெலிமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சம்பவம் தொடர்பில் “பட்டு மீயா” மற்றும் அவரது மூன்று சகாக்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரந்தெனிய சுத்தாவின் தரப்பினர் தம்மைக் கொல்லத் தயாராக இருந்ததாகவும் அதற்கு ஆதரவான ஒருவரை இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, காலி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பகுதியில், கரந்தெனிய சுத்தாவின் தரப்பினர் இருந்துள்ளனர்.

இன்று காலை கரந்தெனிய சுத்தா தரப்பினர் “பட்டு மீயா” மற்றும் அவரது சகாக்களையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து “பட்டு மீயா” உள்ளிட்ட குழுவினரை பூசா சிறைச்சாலைக்கு மாற்றியதாக சிறைச்சாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.