நாளை இலங்கைக்கும் இந்த நிலைமை வரலாம்? இரட்டை வேடம் போட்ட உக்ரைன்

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கையில் விடுதலைப் புலிகள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பயிற்சி அளித்தது, இதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கையின் போர் விமானங்களை அதே விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராக உக்ரைன் விமான படையினரே செயல்படுத்தினர் என இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் தேசிய இனத்துக்கும் ரஷ்ய மொழி பேசும் ரஷ்ய தேசிய இனத்தினருக்குமான நீண்ட கால மோதல் இப்போது நாடுபிடி யுத்தமாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதையும் தேசிய இனப்பிரச்சனையையும் முன்வைத்து உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது.

உக்ரைன் – ரஷ்யா யுத்தத்தை தொடர்ந்து பல லட்சம் உக்ரைனிய மக்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளை நம்பியிருந்த உக்ரைன் இப்போது நட்டாற்றில் விடப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவின் கோரப்பிடிக்குள் சிக்கி உக்ரைன் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது. இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல லட்சம் பேரை கொன்று அழிக்க காரணமாக இருந்த கொத்து குண்டுகள் – பாஸ்பரஸ் குண்டுகளை கொடுத்ததே உக்ரைன் என்கிற ஒருவாதத்தை முன்வைத்து ரஷ்யாவின் படையெடுப்பை நியாயப்படுத்துகிற குரல்கள் கேட்கின்றன.

இது தொடர்பாக ஈழத் தமிழ் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, உக்ரைன் தொடர்பாக இருவித கருத்துகளை நம்மிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இன்றைக்கும் உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவரது ஏற்பாட்டில் அந்த இயக்கத்துக்கு உக்ரைன் ராணுவம் பயிற்சி அளித்தது,

இதேவேளை, உக்ரைன் ராணுவத்தின் பெண்கள் படையணி பயிற்சி வழங்கி இருக்கிறது. இதற்கு பெருந்தொகையான பணத்தையும் உக்ரைன் அரசுக்கு விடுதலைப் புலிகள் வழங்கினர் என அந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றன.

இதனை மோப்பம் பிடித்த இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் அளித்த பணத்தைவிட கூடுதலாக தந்து 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் போர் விமானங்களை இயக்க உக்ரைன் விமானப் படையினரை வரவழைத்தது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உக்ரைன் தேசிய இனப் பிரச்சனையில் சிக்கி இருப்பதாக கூறப்பட்டாலும் அமெரிக்காவை நம்பி பக்கத்து தேசத்து பெரியண்ணன் ரஷ்யாவை பகைத்துக் கொண்டு இப்போது நாட்டையே பறிகொடுக்க வேண்டிய பரிதாபத்தில் உக்ரைன் இருக்கிறது. இதேபோன்ற நிலைமைதான் நாளை இலங்கைக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை என ஈழப் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us