ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இந்தக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னைப் பற்றிப் பேசிய வீடியோவை மைக்கில் வைத்துக் காட்டினார்.
கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றியத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்ட மேடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகியோரின் புகைப்படங்கள் பெரிய அளவில் ஒரே அளவில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த விழாவில் பேசிய செங்கோட்டையன், “தடுக்கி விழுந்தாலும் தமிழ்நாட்டில் யார் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வரவில்லை. இந்தக் கூட்டம் எதிர்கட்சித் தலைவரின் கட்டளையில் நடக்கிறது. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எண்ணற்ற தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காட்டிய பாதையில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். செய்தியாளர்கள் என்னிடம் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். காலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கும் எதையும் சொல்ல மாட்டேன்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லை. அவர்களின் புகைப்படங்கள் இல்லாததால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று நான் புறக்கணிக்கவில்லை. இதைப் பற்றி இப்போது நிறைய பேர் பேசுகிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. பல வாய்ப்புகள் வந்த போதும் கட்சிக்காக பாடுபட்டவன் நான். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கிறேன்,” என்று கூறினார்.