அவர் விட்டுச்செல்லும் அப்படியே இருக்கும்…. பவதாரணி மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

அவர் விட்டுச்செல்லும் அப்படியே இருக்கும்…. பவதாரணி மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் இசைஞானி எனக் கொண்டாடப்படும் இளையராஜாவின் மகளான பவதாரணி பல பாடல்களை பாடி பிரபலம் ஆனவர். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் பவதாரணியும் ஒருவர். பவதாரணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். பாரதி படத்தில் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் அவரது பாடும் திறமைக்கு சான்றாக அமைந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இலங்கையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 47. அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதையடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில் “பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி , தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. ‘பாரதி’ திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.