தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசால் அச்சுறுத்தப்படும் தமிழ் ஊடகவியலாளர்; காரணம் இதுதான்!

சிங்கள இளைஞர்கள் நால்வரை மடுவில் உள்ள மக்கள் நையப்புடைத்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற சுயாதீன ஊடகவியலாளர் நடராசா ஜெயகாந்தன் அவர்களை மடு பொலிஸார் அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது,

சம்பவம் தொடர்பில் மேலும்.,

மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று அநாதை குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக கூறி, சில தமிழ் மக்களை மிரட்டியும் நிதி வசூலித்த அனுராதபுரம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட சிங்கள இளைஞர்கள் நால்வரை சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து இன்று (7) நையப்புடைத்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து சம்பவவிடத்துக்குச்சென்ற அப்பகுதி கிராம நிலதாரி நடந்த சம்பவத்தை கேட்டறிந்ததுடன், மடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸார் அவர்களை காப்பாற்றும் விதமாக செயற்பட்டதுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொது மக்கள் அப்பகுதி ஊடகவியலாளர் நடராசா ஜெயகாந்தனுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அப்பகுதிக்கு சென்ற அவர் செய்தி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதனை அவதானித்த மடு பொலிஸார் இங்கு எல்லாம் புகைப்படம் எடுக்க கூடாது, நீங்கள் யார் என கடுந்தொனியில் மிரட்டினார், அப்போது அவர் நான் ஒரு ஊடகவியலாளர் என அடையாள அட்டையை காட்டிய பின்பும் அவரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன், அவரின் பேர் மற்றும் புகைப்படங்களை சேகரித்து சென்றனர்.

மடு பொலிஸாரின் குறித்த செயற்பாடு தொடர்பில் மடு பொலிஸ் நிலைய அதிகாரி (O.I.C ) ராஜபக்ச அவர்களுக்கு ந.ஜெயகாந்தன் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளதுடன், மடு பொலிஸாருக்கெதிராக மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர்கள் சார்ந்த பல உண்மைகளை தையிரியமாக வெளிக்கொண்டுவரும் இளம் ஊடகவியலாளரான இவர் இதற்கு முன்பும் செய்தி தொடர்பில் ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையால் அச்சுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.