கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 280 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 1000 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.
இந்த நிலச்சரிவு பாதிப்பில் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். கிட்டத்தட்ட 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. மேலும் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், திரைத்துறையை சேர்ந்த பலரும் உதவிகள் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விக்ரம், கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் கொடுத்தார். அதையடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.