இரவோடு இரவாக ஷாக்.. தென்கொரியாவில் திடீரென எமர்ஜென்சி பிரகடனம்.. அதிபர் யூன் திடீர் அறிவிப்பு

இரவோடு இரவாக ஷாக்.. தென்கொரியாவில் திடீரென எமர்ஜென்சி பிரகடனம்.. அதிபர் யூன் திடீர் அறிவிப்பு

சியோல்: தென் கொரியாவில் இப்போது எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார். அங்கு பட்ஜெட் மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், கம்யூனிச சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறி எமர்ஜென்சியை அமல்படுத்தினார்

கொரியாவில் அடுத்தாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அங்குள்ள யூன் தலைமையிலான அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதன் காரணமாக அங்குத் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இதற்கிடையே கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி நிலையை அமல்படுத்துவதாக அதிபர் யூன் சுக் அதிரடியாக அறிவித்துள்ளார்.

எமர்ஜென்சி நிலை: இது தொடர்பாக அந்நாட்டு மக்களிடம் டிவியில் உரையாற்றிய தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் கூறுகையில், “வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் நான் அவசரக்கால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன் இங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் வாழ்வாதாரம் மீது அக்கறை இல்லை.. சிறப்பு விசாரணைகள் மற்றும் நீதி விசாரணையில் இருந்து தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள்” என்றார்.

அதிபர் யூனின் மக்கள் சக்தி கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான கொரியாவின் ஜனநாயகக் கட்சியும் அடுத்த ஆண்டு கொண்டு வரப்படவுள்ள பட்ஜெட் மசோதா குறித்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனச் சொல்லி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் நாட்டில் எமர்ஜென்சியை அதிபர் யூன் பிரகடனப்படுத்தியுள்ளார்
எதிர்க்கட்சிகள்: அவர் மேலும் கூறுகையில், “நமது தேசிய சட்டமன்றம் இப்போது குற்றவாளிகளின் புகலிடமாகவும், சர்வாதிகாரத்தின் குகையாகவும் மாறியுள்ளது.

அங்குள்ள சிலர் நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி நமது நாட்டின் ஜனநாயகத்தைக் கவிழ்க்க முயல்கிறார்கள். போதைப்பொருள் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது, பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான நிதியைக் குறைக்கச் சொல்கிறார்கள். நாட்டை போதைப்பொருள் புகலிடமாகவும், மக்களின் பாதுகாப்பில் குளறுபடிகளைச் செய்யவே எதிர்க்கட்சிகள் இதுபோல செய்கிறார்கள்” என்றார்.

கொரியாவிலும் அமெரிக்காவைப் போலவே அதிபர் ஆட்சி முறை தான். இதன் காரணமாகவே கொரிய அதிபராக யூன் சுக் இருந்தாலும் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. நாடாளுமன்றத்தில் அவரது மக்கள் சக்தி கட்சிக்கு 108 இடங்கள் மட்டுமே உள்ளன. அதேநேரம் பிராதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு சுமார் எம்பிக்கள் உள்ளன. இதன் காரணமாகவே அடுத்தாண்டின் பட்ஜெட்டை அவர்களால் முடக்க முடிகிறது.

தேச துரோகிகள்: எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்த அதிபர் யூன். ஒரு கட்டத்தில் அவர்களை ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் செயல்படும் தேச விரோத சக்திகள் என்றும் குறிப்பிட்டார். மேலும், தென் கொரியாவின் ஜனநாயகத்தைக் காக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தன்னிடம் வேறு வழி இல்லை இல்லை என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “வேறு வழியில்லாமல் தான் நான் எமர்ஜென்சியை கொண்டு வருகிறேன். இதைத் தவிர்க்க முடியவில்லை. அதேநேரம் தேச விரோத சக்திகளை விரைவில் ஒழித்து நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவேன்” என்று அவர் குறிப்பிட்டார். இதனால் விரைவில் அவர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.