வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தற்போது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் தலையில் இடியாக இறங்கி உள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை இழக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை இந்திய குடியுரிமை பெற்ற பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நம் நாட்டின் குடியுரிமை என்பது வழங்கப்படும். அதேபோல் தாய், தந்தையில் ஒருவர் நம் நாட்டை சேர்ந்தவராகவும், இன்னொருவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில் பெற்றோர் கேட்டு கொண்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை என்பது வழங்கப்படும்.
ஆனால் அமெரிக்காவில் சட்டம் என்பது வேறு விதமாக உள்ளது. பெற்றோரான தாய், தந்தை ஆகியோரில் இருவரும் வெளிநாடுகளை சேர்ந்தவராக இருந்தாலும் கூட அவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறக்கும் பட்சத்தில் அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கொடுக்கும் முறை உள்ளது. இந்த சட்டம் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். முன்னதாக அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவோம். குடியுரிமை திருத்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவோம் என்று கூறியிருந்தார். அதோடு அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்து இருந்தார்.
தற்போது அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி முறைப்படி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று செயல்பட உள்ளார். இந்நிலையில் தான் தற்போது டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிக்கும் வெளிநாட்டினருக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதாவது அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் நாட்டில் நடைமுறையில் இருக்கும் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவது அபத்தமானது. அதோடு கேலிக்கூத்தானது. இதை முடிவுக்கு கொண்டு வர ஒரு நிர்வாக உத்தரவே போதும். அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே இந்த உத்தரவைப் பிறப்பிக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார். இதுதான் தற்போது பெரும் புயலை கிளப்பி உள்ளது.
அதாவது பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்காவில் குடியுரிமை ரத்து செய்யப்படும்போது தற்போது அங்கு அந்த சட்டத்தின் கீழ் பிறப்புரிமை பெற்றுள்ளவர்களும் குடியுரிமையை இழக்க நேரிடலாம். அதன்படி பார்த்தால் அமெரிக்காவில் வாழ் இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அமெரிக்காவில் இந்தியர்கள் ஏராளமாக உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து Pew research Analysis வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி அமெரிக்காவில் 4.8 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) அதாவது 48 லட்சம் இந்திய – அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். இதில் 34 சதவீதம் பேர் அதாவது 1.6 மில்லியன் (16 லட்சம் பேர்) அமெரிக்காவில் பிறந்தவர்கள். இந்த 16 லட்சம் பேரும் அமெரிக்காவின் பிறப்புரிமை சட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர். இதனால் டொனால்ட் டிரம்ப்பின் தற்போதைய அறிவிப்பு என்பது இந்த 16 லட்சம் இந்தியர்களும் குடியுரிமையை இழக்கலாம் என்று சொல்லப்படுகிறது.