வெலிகடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் பிரதான சிறை காவலருக்கு, சிறையில் உள்ள பெண் கைதியொருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த பெண் சிறைக் காவலர் பொரளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் விடயங்களை முன்வைக்குமாறு பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல இன்று (11) உத்தரவிட்டார்.
“இன்னும் 7 நாட்களுக்குள் நீ கொல்லப்படுவாய்… உன் குடும்பமும் கொல்லப்படும்” என குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலையில் உள்ள சந்தேகநபர் வெளியாட்களுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளாரா என்பதை விசாரணை செய்வதற்கு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களின் தொலைபேசி பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஏனைய கைதிகளுடன் அநாகரீகமாக நடந்துகொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் காரணமாக சந்தேகநபர் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பின்னர், அவரை மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவுக்கு மாற்றுமாறு களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கிடைத்த கடிதத்திற்கு அமைவாக, அவர் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதும் பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களின் ஊடாக தெரியவந்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பெண் சந்தேகநபர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு எவ்வாறு திரும்பினார் என்பது தொடர்பில் பிரதான சிறை காவலருக்கு சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, இது தொடர்பிலான விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தருணத்தில், குறித்த சந்தேக நபர் மகளிர் பிரிவில் உள்ள கழிவறைக்குள் சென்று கெசல்வத்த தினுக என்ற நபருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்ததாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சம்பவத்தைப் பார்த்த சிறை காவலர் சந்தேகத்திற்குரிய பெண்ணை மலசலகூடத்திலிருந்து வெளியே இழுத்துச் சென்று விசாரணை செய்ததாகவும், விசாரணையின் போது தரையில் இருந்து கைகளில் மணலை அள்ளி வீசியதாகவும், 7 நாட்களுக்குள் சிறை காவலர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளதாகவும் நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, சிறைச்சாலையில் உள்ள சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்காக, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களிடம் தொலைபேசி பதிவுகளை சமர்ப்பிக்குமாறு பொரளை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.