திடீரென மயங்கி விழுந்த சீமான்.. பதறிய தொண்டர்கள்.. அங்கே என்ன நடந்தது ?

இந்த செய்தியை பகிருங்கள்

திருவொற்றியூரில் போராட்டம் நடத்தச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பினார். திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதிகளில் வீடுகள் இடிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சீமான் சென்றிருந்தார். கடுமையான வெயில் அடித்த நிலையில் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் சீமான். நம்பிக்கையோடு இருங்கள். வீடுகளை இடித்துவிடுவார்கள் என்று பயப்பட வேண்டாம். கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருங்கள் என்று கூறினார். எந்த கட்டிடம் இடித்தாலும் நாம் வந்து போராடுவோம் என்று கூறினார். கடுமையான வெயில் அடிக்கிறது அதில் போராடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார் சீமான். ஓட்டுரிமை, குடிநீர், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார். சொத்து வரி உயர்தப்பட்டது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர், அதற்குத்தானே நீங்கள் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறீர்கள் என்று கூறினார். எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது என்றும் கூறினார்.

சென்னையில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் ரவுடித்தனம் செய்வதாகவும், நான்தான் கவுன்சிலர் என்று அடாவடியில் ஈடுபடுவது பற்றியும் என்ன நினைக்கிறீர்கள் என்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், இதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இந்த கொடுமை நடக்கக் கூடாது என்றுதான் போராடியதாக கூறினார். இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும் சீமான் கூறினார். கவுன்சிலரின் கணவர் பணம் கேட்டு மிரட்டுவதைப் பார்க்கிறோம். இந்த ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் என்றும் கூறினார். இன்னும் நான்கு ஆண்டுகள் நீங்கள் சகித்துக்கொண்டுதான் இருந்தாக வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார். ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், இலாகா மாற்றி விட்டால் மட்டும் சரியாகி விடுமா என்று கேட்டார். அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென சீமான் மயங்கி விழுந்தார். அங்கிருந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும் செய்தியாளர்களும் பதற்றமடைந்தனர். உடனடியாக சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் சீமான் வீடு திரும்பினார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us