ஹெஸ்புல்லாவுக்கு உயிர் கொடுக்கணும்.. சிரியா போரில் ஈரான் என்ட்ரி? களமிறக்கப்படும் ஈராக் படைகள்

ஹெஸ்புல்லாவுக்கு உயிர் கொடுக்கணும்.. சிரியா போரில் ஈரான் என்ட்ரி? களமிறக்கப்படும் ஈராக் படைகள்

டமாஸ்கஸ்: சிரியாவில் தற்போது புதிய போர் வெடித்துள்ளது. சிரியா அதிபர் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பின் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் போரை தொடங்கி உள்ளனர். இந்த போர் சிரியா மட்டுமின்றி ஈரானுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஈரான், சிரியாவுக்கு ஆதரவாக ஈராக்கில் இருந்து படைகளை இறக்கலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் – காசா மோதலாகும். இந்த மோதல் தற்போது போராக மாறி உள்ளது. அதேபோல் இஸ்ரேல் – ஈரான் மற்றும் இஸ்ரேல் – லெபானின் ஹெஸ்புல்லா இடையேயும் மோதல் நீடித்து வருகிறது.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் தான் தற்போது சிரியாவில் போர் தொடங்கி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக உள்ள சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமாக தொடங்கி உள்ளது. இந்த உள்நாட்டு போர் என்பது சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக தொடங்கி உள்ளது. அதாவது சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது அவருக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருவது வழக்கம். இந்த சண்டை கடந்த 2011ல் உள்நாட்டு போராக மாறியது. கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரை கைப்பற்றினர்.

அதன்பிறகு ஈரான், ரஷ்யா உதவியுடன் 2016ல் அந்த நகரை அதிபர் பஷர் அல் அசாத் கைப்பற்றினார். தற்போது அந்த நகரில் தான் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. இந்த முறையும் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக புரட்சிப்படை கிளம்பி உள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பின் தலைமையில் போராட்டக்காரர்கள் அந்த நகரை கைப்பற்றி உள்ளனர். இந்த நகரில் தற்போது அதிபர் ஆதரவு படை மற்றும் கிளர்ச்சி படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் தற்போது வரை வெளிநாடுகள் எதுவும் தலையிடவில்லை. ஏனென்றால் உள்நாட்டு போர் இப்போது தான் தொடங்கி உள்ளது. விரைவில் வெளிநாடுகளின் தலையீடு என்பது இந்த போரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முதலில் ஈரான் களமிறங்கலாம் என்று சொல்லப்படுகிறது. சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக ஈரான் அலெப்போ நகருக்கு படைகளை அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் செயல்பட்டு வரும் கதைப் ஹெஸ்புல்லா (kata’ib Hezbollah), அசைப் அல் ஹக் ( Asaib Ahl Al Haq), அன்சார் அல்லா அல் அஃபியா (Ansar Allah al – Awfiya) ஆயுத தாங்கி சண்டையிலும் படைகளை அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படைகளை சில நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. விரைவில் இந்த படைகள் சிரியாவுக்குள் நுழைந்து அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடலாம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ஈரானின் இந்த செயலுக்கு பின்னணியில் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அதாவது ஈரான் அதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு லெபனான் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலம் தான் காசா போருக்கு பழித்தீர்க்கும் வகையில் இஸ்ரேலை, ஈரான் தாக்கி வருகிறது. அதோடு இஸ்ரேலை தாக்குவதற்கு தேவையான ஆயுத உதவிகள் உள்ளிட்டவை சிரியா வழியாக தான் ஹெஸ்புல்லாவுக்கு செல்கிறது. தற்போது சிரியா உள்நாட்டு போரில் அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சி கவிழும் பட்சத்தில் ஈரானால் ஹெஸ்புல்லாவுக்கு ஆயுத சப்ளை செய்வதில் சிரமம் ஏற்படும். இதனால் ஈரான் நிச்சயமாக சிரியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.