தெஹ்ரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுத போர் வெடிக்குமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானிடம் இருந்து மிக முக்கியமான தகவல் வந்துள்ளது. அதாவது அணு ஆயுதத்தைத் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டக் கூடுதலாக 6000 மையங்களை ஈரான் அமைக்கவுள்ளது. இது அணு ஆயுத போர் குறித்த பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
மத்திய கிழக்கில் கடந்தாண்டு தொடங்கிய போர் இன்னும் முடிவதாக இல்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. குறிப்பாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
முதலில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கும் இடையே தான் மோதல் இருந்தது. ஆனால், இப்போது ஈரான் உடன் நேரடியாகப் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. அணு ஆயுதங்கள்: ஈரானிடம் இப்போது அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை. ஆனால், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை ஈரான் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய ஏதுவாக சுமார் 6,000 யுரேனியம் செறிவூட்டல் மையங்களை நிறுவ ஈரான் முடிவு செய்துள்ளதாகச் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஈரான் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஜெனிவாவில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்ற போதிலும், தூதரக ரீதியாகப் பேச்சுவார்த்தையைத் தொடர இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. அதில் ஈரானுக்கு எதாவது சாதகமான செய்தி கிடைக்கலாம்
செறிவூட்டக் கூடுதல் மையங்கள்: அணு ஆயுதங்களைத் தயாரிக்க பொதுவாக 90% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை. ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடுக்கும் வகையில் ஐநா 60%க்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டக்கூடாது என்று நிபந்தனை விதித்து இருந்தது. அந்த நிபந்தனையை ஈரான் ஏற்றுக் கொண்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ஈரான் தனது நடன்ஸ் ஆலையில் யுரேனியத்தை செறிவூட்டக் கூடுதலாக 6000 மையங்களை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஈரானால் வேகமாக யுரேனியத்தை செறிவூட்ட முடியும்.
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்று ஈரான் கூறி வந்தாலும் கூட, ஈரான் செய்யும் செயல்களை வைத்துப் பார்த்தால் மீண்டும் அணு ஆயுதத்தை நோக்கியே செல்வது போலத் தெரிகிறது. டிரம்ப்: இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப், அடுத்த மாதம் பதவியேற்ற உடனேயே ஈரானுக்கு நெருக்கடி தருவார் என்றே தெரிகிறது. கடந்த 2016- 2020 வரை அவர் அதிபராக இருந்த போதும் கூட ஈரானுக்கு அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுத்தார். குறிப்பாக 2015ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடனான ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்தும் கூட அமெரிக்கா விலகும் என அறிவித்தார். மேலும், ஈரான் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
இதற்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை அதிகரித்தது. இப்போது மீண்டும் டிரம்ப் அதிபர் பதவிக்கு வரும் நிலையில், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை ஈரான் மட்டுமின்றி உலகமே கவனித்து வருகிறது..