அரசியலைத் தாண்டி, சினிமாக்காரர்களுக்கு விஜயகாந்த் செய்த உதவி..

அரசியலைத் தாண்டி, சினிமாக்காரர்களுக்கு விஜயகாந்த் செய்த உதவி..

இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரியை வாலி எழுதியிருப்பார். இது புரட்சி கலைஞர் விஜயகாந்திற்கு தான் சரியாக பொருந்தும். ஒரு நடிகன் இறந்ததற்கு சக கலைஞர்கள் கண்ணீர் விடலாம், ஒரு கட்சித் தலைவன் மறைந்ததற்கு தொண்டர்கள் கண்ணீர் விடலாம். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழகமே தங்கள் வீடுகளில் ஏற்பட்ட இழப்பாக இன்று கதறி வருகிறார்கள்.

நடிகர் விஜயகாந்த், மக்கள் மனதில் நிலையாக நின்ற கேப்டன் இன்று அதிகாலையில் உயிரிழந்து இருப்பது மிகப்பெரிய துயர செய்தியாக இருக்கிறது. கேப்டனை கலியுக கர்ணன் என்று அழைக்கும் அளவிற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். அதிலும் சினிமாவுக்காக அவர் செய்த உதவிகள் ஏராளம். பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவுக்குள் வராமல் தனது ஆசைக்காக வந்த கேப்டன், நிறைய பேரை வாழ வைத்திருக்கிறார்.

54 புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த கேப்டன்

ரஜினி மற்றும் கமல் என்ற இரண்டு ஜாம்பவான்கள் திரையுலகத்தில் வளர்ந்து வந்து கொண்டிருக்கும்போதே அவர்களைத் தாண்டி தனக்கான இடத்தை பிடித்தார் கேப்டன். விஜயகாந்தின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் ஒவ்வொரு கிராமமும் திருவிழா போல் காட்சி அளிக்கும். 157 படங்களில் நடித்த விஜய்காந்த் தன்னுடைய வாழ்நாளில் 54 புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் படிக்கும் ஒரு சில மாணவர்களுக்கு அவ்வப்போது சினிமா வாய்ப்பு கிடைப்பது உண்டு. ஆனால் அவர்கள் மீது சினிமா துறையினருக்கு பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது. திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ஊமை விழிகள் படத்தில் நடிப்பதற்கு நிறைய பெரிய நடிகர்கள் யோசித்தார்கள். ஆனால் விஜயகாந்த் தீன தயாளன் என்னும் வயசான போலீஸ் கேரக்டரில் அப்போதே நடித்துக் கொடுத்தார்.

பின்னரும் திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு வெளியில் வந்த இயக்குனர்களுடன் இணைந்து படம் பண்ணினார். தன்னுடைய சக கலைஞர்கள் நிறைய பேரை தயாரிப்பாளர்களாக மாற்றிய பெருமையும் விஜயகாந்த்திற்கு உண்டு. நீ ஒரு படத்தை தயாரி, நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று கதை கேட்காமலே ஒப்புக்கொண்டு நடித்தவர் விஜயகாந்த் என நடிகை வடிவுக்கரசி ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா சினிமாவில் வந்த புதிரில் சொல்லும் அளவுக்கு பெயர் வாங்கவில்லை. அவர்களுடைய படங்களில் விஜயகாந்த் நடித்து மக்களிடையே அவர்களை கொண்டு சேர்த்தார். அப்படி விஜயுடன் நடித்த படம் தான் செந்தூரப்பாண்டி. சூர்யாவுடன் நடித்த படம் தான் பெரிய அண்ணா. இந்த படங்களுக்கு விஜயகாந்த் சம்பளம் வாங்கவே இல்லை.

அதே போன்று நடிகர் முரளி நடித்த முதல் படம் பூவிலங்கு முதல் இரண்டு நாட்களில் திரையரங்கில் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. முரளி விஜயகாந்தின் கூடப்பிறந்த தம்பி என யாரோ கிளப்பி விட்ட பீதியால் கிராமங்களில் தக்கை போடு போட்டிருக்கிறது அந்த படம். இப்படி சினிமாவில் பல பேரை வளர்த்து விட்ட விஜயகாந்த் தன் மகன்களின் வெற்றியை பார்க்காமலேயே மறைந்து விட்டார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *