Monday, December 10 2018

LYAC TV

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிப்பது என்பது சாத்தியப்படாதது; பா.ஜ.க தலைவர் பரபரப்பு!

Dec 06, 2018    860

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிப்பது குறித்து மாநில அரசே முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்த மூன்றாம் நாளில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழக அரசு.

ஆனால், மேற்கண்ட அமைச்சரவையில் பரிந்துரையை கிடப்பில் போட்டுள்ளது ஆளுநர் மாளிகை. எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் மாளிகையின் இந்த மௌனம் தமிழார்வலர்களை அதிருப்தியடைந்துள்ள சூழலில், பேரறிவாளன் உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க கோரி போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன தமிழக அரசியல் கட்சிகள்.

இந்த நிலையில், எழுவர் விடுதலை விவகாரம் குறித்து பேசியுள்ள பாஜகவின் முன்னணி தலைவர் கரு.நாகராஜன், "பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிப்பது என்பது சாத்தியப்படாதது. காரணம், அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள். இந்த நாட்டின் தலைவரை கொன்றவர்கள். அவர்களை விடுவிக்க கூறுவோர் அந்த சம்பவத்தால் கொலை செய்யப்பட்ட மற்றைய தமிழர்களுக்காக ஏன் பேசவில்லை" என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், "இவர்கள் எழுவரை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துவதை விட சட்ட ரீதியாக முயற்சிக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்து மாநில அரசே முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Loading...